யாழில் கோலாகலமாக ஆரம்பமான 'வடக்கின் போர்' (PHOTOS)

ஆசிரியர் - Admin
யாழில் கோலாகலமாக ஆரம்பமான 'வடக்கின் போர்' (PHOTOS)

யாழ் மத்திய கல்லூரிக்கும்,யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 'வடக்கின் போர்' என அழைக்கப்படுகின்ற சிநேகபூர்வமான 112 ஆவது துடுப்பாட்ட போட்டிகள் இன்று  வியாழக்கிழமை(08)காலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் எ.எழில்வேந்தன்,மற்றும் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் எல்.டி.ஞானப்பொன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டு 'வடக்கின் போர்' என அழைக்கப்படுகின்ற துடுப்பாட்ட போட்டி நிகழ்வைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

90 ஒவர்கள் கொண்ட குறித்த போட்டியில் முதலில் நாணயச் சுழற்சியில் யாழ் .சென்ஜோன்ஸ் கல்லூரி அணியினர் துடுப்பாட ஆரம்பித்தனர். இடைவேளையின் பின்னரான போட்டி முடிவுகள் படி 39 ஒவர் நிறைவில் 146 புள்ளிகள் என்ற அடிப்படையில் நான்கு விக்கெற்றுக்களை இழந்து யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி அணியினர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் வடக்கின் போரைக் கண்டுகளிப்பதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அயற்பாடசாலை மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இப் போட்டி நாளைய தினமும் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.