7 மாதங்களுக்கு பின் சபரிமலை திறக்கப்பட்டது!! -இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி-
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் முக்கியமானது. இந்த மண்டல பூஜை அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், கோவிலில் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு கேரள அரசும் சம்மதம் தெரிவித்தது. அதே சமயத்தில், மண்டல பூஜைக்கு முன்பே, அதாவது ஐப்பசி மாத பூஜையின் போதே பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, இரவில் நடை அடைக்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) முதல் 21 ஆம் திகதி வரை ஐப்பசி மாத பூஜை நடைபெறும். இந்த 5 நாட்களும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆன் லைனில் முன்பதிவு செய்து வரும் அய்யப்ப பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதுவும், தினமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். மேலும் நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பக்தர்கள் பம்பையில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும், அவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
7 மாதங்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.