14 மீனவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம்..!
தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புது மாத்தளன் பகுதியில் 2020-03-28 அன்று 5 படகுகளில் 14 மீனவர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி,
தொழில் புரிய அனுமதிக்கப்படாத பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை மிஞ்சிய அளவிலான வலை மூலம் , பதிவு அற்ற படகு மற்றும் பிழையான பதிவிலக்கங்கள் கொண்ட படகுகளில்
தொழிலில் ஈடுபட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அலுவலகத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 மீனவர்களும் தமது குற்றங்களை ஒத்துக்கொண்ட நிலையில் 14 பேருக்கும் தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம்
16 லட்சத்து 80 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதேநேரம் குறித்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருளான வலையினை அழிக்குமாறும்
மன்று கட்டளை இட்டது.