அதிக அளவில் மருத்துவ கழிவுகள் குவியும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-ம் இடம்!
கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முக கவசம், கையுறை, முழு பாதுகாப்பு கவச உடை போன்றவற்றை பொதுமக்களும், மருத்துவ பணியாளர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்பிறகு அப்பொருட்கள் கழிவுகளாக குவிக்கப்படுகின்றன.
முழு பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், காலணி உறைகள், கையுறைகள், மனித திசுக்கள், ரத்தம் தோய்ந்த பொருட்கள், காயத்துக்கு போடப்பட்ட கட்டுகள், காட்டன் பஞ்சுகள், ரத்தம் தோய்ந்த படுக்கைகள், ரத்த உறைகள், ஊசிகள் ஆகியவை கொரோனா தொடர்பான உயிரி மருத்துவ கழிவுகளாக கருதப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தங்கள் மாநிலங்களில் இந்த கழிவுகள் சேர்ந்தது குறித்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல்களை அனுப்பி வந்தன. அதன் அடிப்படையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாதம் முதல் கடந்த 4 மாதங்களில் நாடு முழுவதும் கொரோனா தொடர்பான 18 ஆயிரத்து 6 டன் உயிரி மருத்துவ கழிவுகள் உருவாகி உள்ளன. இவை 198 பொது உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அளவில் பார்த்தால், மராட்டிய மாநிலத்தில் மேற்கண்ட 4 மாதங்களில் 3 ஆயிரத்து 587 டன் உயிரி மருத்துவ கழிவுகள் உருவாகி, முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து, 1,737 டன் கழிவுகளுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. குஜராத், கேரளா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேற்கண்ட 4 மாதங்களில், செப்டம்பர் மாதத்தில் அதிக அளவாக 5 ஆயிரத்து 490 டன் உயிரி மருத்துவ கழிவுகள் சேர்ந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில், மாநில அளவில் குஜராத் முதலிடத்திலும் (622 டன்), தமிழ்நாடு 2-ம் இடத்திலும் (543 டன்) உள்ளன. ஜூன் மாத உயிரி மருத்துவ கழிவுகள் சேகரிப்பில் தமிழ்நாடு 4-ம் இடத்திலும், ஜூலை மாதத்தில் தமிழ்நாடு 3-ம் இடத்திலும் உள்ளது.
கொரோனா தொடர்பான இந்த உயிரி மருத்துவ கழிவுகளை கையாள்வது, சுத்திகரிப்பது, அப்புறப்படுத்துவது குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மார்ச் மாதம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
மேலும், மருத்துவ கழிவுகள் உருவாவதையும், சேகரிக்கப்படுவதையும், அப்புறப்படுத்தப்படுவதையும் கண்காணிக்க கடந்த மே மாதம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு செல்போன் செயலியை உருவாக்கியது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் இந்த செயலியை பயன்படுத்துவதை சுப்ரீம் கோர்ட்டு கட்டாயமாக்கியது.