ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி!

ஆசிரியர் - Admin
ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளியின் மகள் ஷ்ரவானி (16). தனியார் பள்ளியில் பயின்று வரும் இவருக்கு மாவட்ட ஆட்சியராகும் கனவு நிறைவேறியுள்ளது. நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு 'ஒரு நாள்' மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். 'சமூகத்தின் எதிர்காலம் பெண் குழந்தைகள்' என்ற பெயரில் அனந்தபூர் ஆட்சியர் காந்தம் சந்துருடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, பெண் குழந்தைகளின் உரிமை பற்றியும், சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்தஸ்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்பட்டது.     

காட்டன் புடவை உடுத்திக்கொண்டு ஊடகங்களின் பரபரப்புக்கு முன் தோன்றிய ஷ்ரவானி தைரியமாகப் பேசினார். "விலங்குகளைக் காக்கவும் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கவும் நாம் தவறிவிட்டோம்" என்று தெரிவித்தார். ஷ்ரவானியின் வெளிப்படையான பேச்சைக் கேட்டுச் சுற்றியிருந்த அதிகாரிகள் ஆச்சர்யமடைந்தனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண் ஒருவருக்கு, 25,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க ஒப்புதல் அளித்தார்.

"ஊரக வேலை செய்யும் பெண்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 8 வரை எந்த அலுவல் வேலைகளுக்கும் அழைக்கப்படக் கூடாது" என்று மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உரையாடி ஒப்புதல் கோப்பில் கையெழுத்திட்டார். மேலும், ஆட்சியர் கையெழுத்திடும் பல கோப்புகளைக் கவனித்தார். எதிர்காலத்தில் ஆசிரியராகி இடைநிற்கும் மாணவர்களைச் சரியாகக் கல்வி கற்க வைப்பதே தனது லட்சியம் என்கிறார் ஷ்ரவானி.

தொடர்ந்து, பத்தாம் வகுப்பு படிக்கும் சின்மயி என்ற மாணவி அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நாள் முனிசிபல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். "வயதுவந்த மாணவிகள் மாதவிடாய் காலத்தில் நாப்கின் பயன்படுத்துவதும் மற்றும் பயன்படுத்தியதை முறையான குப்பைத் தொட்டிகளில் போடுவதும் சிரமமாக உள்ளது. ஆதலால் பள்ளிகளில் ஒழுங்கான நாப்கின் பயன்பாட்டு இயந்திரம் வேண்டும்" எனக் கோரினார். ஒருநாள் ஆட்சியரும், முனிசிபல் கமிஷனரும் இணைந்து நகரம் தூய்மையாக உள்ளதா என்பதைக் காணக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மெக்கானிக் ஒருவரின் மகள் மதுஸ்ரீ ஒருநாள் வருவாய் இணை ஆட்சியராகவும், சமீரா என்பவர் வருவாய் அலுவலராகவும், சாஸ்த்ரா என்பவர் மேம்பாட்டு இணை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டனர்.