SuperTopAds

மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றவர்கள் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்..! ஊடகவியலாளர்கள் இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாள் முனையில் பொய் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலடிப்படையில் ஊடகவியலாளர்களான ச.தவசீலன் மற்றும் கே.குமணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். 

இதன்போது முறிப்பு பகுதியில் நின்றிருந்த கடத்தல் கும்பல் ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன், மரக்கடத்தல் கும்பலின் தலைவனுடைய காணிக்குள் ஊடகவியலாளர்களை இழுத்து சென்று அங்குவைத்தும் தாக்கியதுடன், 

வாள் முனையில் அச்சுறுத்தி தனது காணிக்குள் அடாத்தாக நுழைந்தாக கூறும்படி அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலருடைய ஒத்துழைப்புடன் தப்பிவந்த ஊடகவியலாளர்கள் அருகிலிருந்து இராணுவ முகாமில் விடயத்தை கூறியதுடன், 

பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கின்றனர். எனினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் அங்கிருந்து புறப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்ததுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 

மேலும் மரக்கடத்தல் குழுவின் தலைவன் மீது ஏற்கனவே நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக  கூறப்படுவதுடன், கட்டப்பஞ்சாயத்து, அடிதடிகளையும் அவன் செய்துவருவதாக கூறப்படுகின்றது. இதேபோல் ஊடகவியலாளர்கள் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியனவும்

கடத்தல்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளதுடன், புகைப்படக்கருவி, தொலைபேசி ஆகியவற்றிலிருந்து படங்களும் அழிக்கப்பட்டுள்ளது.