SuperTopAds

தமிழ்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணன் விலகுவதா..? பொதுச்சபையை கூட்டி விரைவில் முடிவை கூறுவேன், ஊழல் பெருச்சாளிகளை கேள்வி கேட்டதே பலருக்கு கோபம்..

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டு கடந்த 10 வருடங்களில் கட்சியினால் நீக்கப்பட்ட 1வது நபர் நானாக இருக்கிறேன். கட்சியில் உள்ள சிலரின் சுயலாபத்திற்கும், சுயநலன்களுக்கும் கட்சியை பயன்படுத்த கூடாது. என நான் எதிர்த்ததே என்னை கட்சியை விட்டு விலக்கும் தீர்மானத்திற்கு காரணம். 

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்குள் இருந்து தொடர்ந்தும் போராடுவேன். கட்சியைவிட்டு விலகும் தீர்மானத்திற்கு நான் செல்லப்போவதில்லை. உட்கட்சி ஜனநாயக மீறலை பார்த்துக் கொண்டிருப்பவன் தமிழ் மக்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாப தலைவர்களில் ஒருவரும், தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கூறியுள்ளார். அண்மைக்கால சர்ச்சைகள் தொடர்பாக நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், கட்சிக்குள் நடந்த உள்ளக முரண்பாடுகள் தற்போது உச்சமடைந்து என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் கட்சியை விட்டு விலக்கப்பட்டவன் நான் தான். 

இதுவரை பலர் பல மோசமான குற்றங்களை புரிந்தவர்களை கூட கட்சியை விட்டு நீக்காத நிலையில் முதல் முதலாக என்னை நீக்கியுள்ளார்கள்.என் மீது குற்றசாட்டுக்களை முன்வைத்து எனக்கு கடிதம் அனுப்பட்டது. அக் கடிதத்தில் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்து பதில் கடிதம் அனுப்பினேன். 

என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் மறுத்த நிலையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்தார்கள். அதன் போது காணொளிகள் உள்ளிட்ட 37 ஆவணங்களை என் சார்பில் சமர்பிக்க தயார் எனவும், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஒர் சுயாதீன விசாரணை குழுவை அமைத்தால் 

அதன் முன் சாட்சியங்களை நெறிப்படுத்த தயார் என அறிவித்தேன். அதேவேளை அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தேன். என் மீது அவர்கள் சுமத்திய சில குற்றச்சாட்டுக்களில், அதன் காரணிக்கு அவர்கள் புரிந்த குற்றங்களும் உண்டு. 

அதனால் அவர்கள் விசாரணை குழு அமைப்பதனை கைவிட்டு, என்னை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்தார்கள். இதில் இருந்தே மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள் ஏன் விசாரணை குழு அமைக்கவில்லை? அமைத்தால் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் என்ற பயமே காரணம்.

நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் திசை திருப்ப முற்பட்ட போது அதனை நான் கட்சிக்குள் இருந்து கடுமையாக எதிர்த்தேன். அவர்களின் சுயலாப நோக்கிற்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தேன். 

அதனால் என்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள். எமது கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்தேன். அதுவும் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அங்கும் அவர்கள் தமது சுயலாபத்தை மட்டுமே பார்த்து, 

நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த என்னை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த கட்சிக்காக எனது சொந்தப்பணம் , எனது நேரம் என்பவற்றை எந்த எதிர்பார்ப்பும் இன்றி செலவழித்து , இளைஞர்களை ஒன்றிணைத்து கட்சியை உருவாக்கினேன்.

தமது சுயநலத்திற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பலியிட நினைப்பவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவேன். ஏனெனில் கட்சியை உருவாக்கி , கட்சிக்கு என கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவன் நான். அப்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சியாக உருவாக்க கடுமையாக எதிர்த்தார். 

இது கட்சி இல்லை இயக்கம் நாம் இதன் ஊடாக எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் என்றார். கட்சியாக அதனை மாற்ற முடியாதமைக்கு காரணத்தையும் சொன்னார். அதாவது , கட்சி என உருவாக்கினால் பலர் கட்சிக்குள் இணைவார் அதன் ஊடாக எமது தலமைக்கே ஆபத்தாக அமையும், 

என்று கூறி தனது தாத்தா , அப்பாவிற்கு நடந்தவற்றையும் உதாரணமாக கூறினார். அதற்கு நான் சில சமரசங்களை மேற்கொண்டு , கட்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்கினேன். கிராமங்கள் தோறும் கட்டமைப்பை உருவாக்கினேன்.இன்று கட்சியில் எனக்கு ஆதரவாக பலர் உள்ளனர். 

அவர்கள் எனக்காக கதைக்கும் போது அவர்களுடன் சண்டைக்கு செல்கின்றார்கள். இதனால் பலர் விரக்தியடைந்த நிலையில் காணப்படுகின்றனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடும் மனநிலையில் இருக்கவில்லை. 

அப்போது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் என்னிடம் மிக மன்றாட்டமாக தேர்தலில் போட்டியிட கேட்டனர். என்னிடம் மாத்திரமின்றி , எனது உறவினர் , நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரிடம் மன்றாடினார்கள். 

எல்லோரினதும் அழுத்தம் காரணமாகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன். இன்று என்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் என்னை முதலே கட்சியில் இருந்து துரத்தவில்லை ? நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள்? எனக்கு எது கொள்கை என தெரியும். 

எனக்கு யாரும் கொள்கை சார்ந்து வகுப்பெடுக்க தேவையில்லைஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது எமது கொள்கை என்றால் நான் அதனை எதிர்ப்பேன். ஜனாதிபதி முறமை 1978ஆம் ஆண்டே வந்தது. அதற்கு முதலே இனப்பிரச்சனை இருந்தது.

கட்சி உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி என அடையாளப்படுத்த தொடங்கினவர்கள் , நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தாம் வெற்றி பெற வேண்டும் , என்பதற்காக அருவருக்கத்தக்க செயற்பாடுகளில் இறங்கினார்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாம் பல உபாயங்கள் , திட்டங்களை முன் வைத்த போதும், எமது கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது தலைவருக்கு எனவும் , இரண்டு ஆசனம் கிடைத்தால் செயலாளருக்கு எனவும் , மூன்றாவது ஆசனத்தை ஏனையவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்குவோம். 

ஆனால் எனக்கு பதவி வேண்டாம், நான் இன்றே ராஜினாம கடிதம் எழுதி தருகிறேன் என்றேன். என் இந்த திட்டங்கள் , உபாயங்கள் அனைத்தையும் ஏக மனதாக புறக்கணித்தார்கள்.அதன் பின்னரே என்னைப்பற்றிய அவதூறுகளை அதிகமாக பரப்பினார்கள் , 

உச்சக்கட்டமாக இந்தியாவின் றோ வின் பின்னணியில் இயங்குகிறேன் என்று கூட என்னைப்பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டன. இவை தொடர்பில் நான் தலைவரிடம் முறையிட்டேன். எந்த பயனும் இல்லை. நான் முறையிட்ட போது கட்சியை சிதைக்கும் முயற்சி இதுகளை நம்பாதே மணி என 

என்னிடம் தலைவர் கூறி இரண்டாம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து என்னை பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். என்னை நீக்குவதாக முடிவெடுத்த மத்திய குழு யார் என்று தேடினால் பொருளாளர் , சில மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. 

பிறகு பார்த்தால் மீண்டுமொரு மத்திய குழு கூடியது என்றார்கள் , அது யார் என பார்த்தால் முதல் மத்திய குழு கூட்டத்தில் இருந்த பலர் இரண்டாம் மத்திய குழு கூட்டத்தில் இல்லை. அப்ப யார் மத்திய குழு என்ற வரையறை இல்லை. இப்ப பலர் என்னிடம் கேட்பது , ஏன் முன்னணியின் பதவிக்காக ஆசைப்படுகின்றீர்கள் என , 

எனக்கு பதவி ஆசையில்லை மணி இந்த பதவியை தா என கேட்டால் கொடுப்பேன். அதனை விடுத்து எனக்கு அநீதி இழைத்து பதவியை பறிக்க விட மாட்டேன். ஏனெனில் எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராட வந்தவன் எனக்கெதிரான அநீதிக்கு போராடவில்லை என இருக்க கூடாது.

எனக்கு புதிய கட்சியோ , அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை. நான் உருவாக்கிய கட்சி என் கண் முன்னால் அழிவடைந்து செல்வதனை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். பல கட்சி உறுப்பினர்கள் இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் விரக்தியடைந்துள்ளனர்.

எனக்கு அனுப்பட்ட கடிதத்தில் , விசாரணைகள் எதுவுமின்றி என் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று உள்ளது. அது எப்படி ? நீதிமன்றில் குற்றவாளியா ? சுற்றவாளியா ? என கேட்பார்கள். சுற்றவாளி என்றால் விசாரணை நடக்கும். 

நான் என் மீதான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த நிலையில் எவ்வாறு என் மீது விசாரணையின்றி குற்றத்தை நிரூபிக்க முடியும் ? இவ்வாறான தான்தோன்றித்தனமா ஜனநாயக பண்பற்ற நிலையை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

தமிழ் தேசிய கட்சிகளின் உடைவே சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னணியையும் உடைச்சு நான் புதுக்கட்சியோ , அமைப்போ உருவாக்கி சிங்கள தேசிய கட்சிகள் வடக்கு கிழக்கில் ஆழ கால் ஊன்ற சந்தர்ப்பம் அளிக்க மாட்டேன். 

எனக்கு கட்சியில் பதவிகள் வேண்டும் என ஆசைக்கொள்ள வில்லை. கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன். 

எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றார்.