நீதிமன்ற கட்டளையை மீறாமல் திட்டமிட்டபடி உணவு ஒறுப்பு போராட்டம் நாளை நடக்கும்..!
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை நிச்சயமாக உணவு ஒறுப்பு போராட்டம் நடத்தப்படும். என சட்டத்தரணி என்.சிறீகாந்தா கூறியிருக்கின்றார்.
நீதிமன்ற தடைக்கட்டளையை தொடர்ந்து இன்று மாலை கூடிய தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள்இ பிரதிநிதிகள் நீதிமன்ற தடையை தொடர்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி நாளை காலை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உணவு ஒறுப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம். ஆனாலும் இன்று மதியம் வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்துறை நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றை சமர்பித்து
தடை கட்டளை ஒன்றை பெற்றிருக்கின்றார். கொரோனா ஆபத்தை சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியிருக்கின்றது. இந்த தடை கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாதபோதும்
உண்ணாவிரத போராட்டத்திற்கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம். இந்த பின்னணியில் திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பில் ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
அதனடிப்படையில் நீதிமன்ற கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்பட்டு எமது உணவு ஒறுப்பு போராட்டம் நடத்தப்படும்.
அதேவேளை முன்னர் அறிவித்ததைபோல் 28ம் திகதி வடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் வேண்டி நிற்கிறோம் என்றார்.