யாழ்.மாவட்டத்தில் வேட்டையாடப்படப்போகும் குற்றவாளிகள்..! பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..
யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உதவுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளாார். அதேசமயம் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றிருக்கும் சஞ்சீவ தர்மரட்ண சமூக விரோதிகளை அடக்குவேன் என கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் வடக்கில் குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்களா? இல்லையேல் வழக்கமான வீரவசனங்கள் தானா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக வடக்கில் தினசரி வாள்வெட்டு சம்பவங்களும், நடந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த விதத்திலும் இவை குறைந்ததாக தொியவில்லை.
இந்நிலையில் நேற்று மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் வடக்கில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ளதுடன், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் குற்றச் செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள பொறிமுறைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதை ஆளுநர் இதன்போது ஒப்புக் கொண்டுள்ளதுடன், கிராம மட்டத்திலிருந்து பாதுகாப்பு தரப்புக்கு குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படவேண்டும் என மக்களிடம் கேட்டிருக்கின்றார்.
இதேவேளை நேற்றய தினம் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையேற்றிருக்கும் சஞ்சீவ தர்மரட்ண யாழ்.மாவட்டத்தில் சமூக விரோதிகள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவை ஏற்படின் முப்படைகளின் உதவியையும் கூட பெற்றுக்கொள்வேன் என கூறியிருக்கின்றார்.
மேலும் அவரும் பொதுமக்களின் ஒத்துழைப்பை அவசியம் கேட்டிருக்கின்றார். இந்நிலையில் வடக்கில் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.