5 வருடத்தில் 58 வெளிநாட்டு பயணங்கள்!! -517 கோடி ரூபாவை செலவிட்ட மோடி-

ஆசிரியர் - Editor II
5 வருடத்தில் 58 வெளிநாட்டு பயணங்கள்!! -517 கோடி ரூபாவை செலவிட்ட மோடி-

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டும் சுமார் 517 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் மேற்படி தகவலையும் வெளியிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

கடந்த 2015 இல் இருந்து 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 58 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 517.82 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில் அமெரிக்கா, ரஸ்யா மற்றும் சீனாவுக்கு தலா 5 முறை அவர் சென்றுள்ளார்.

சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு பலமுறை சென்றுள்ளார். இறுதியாக கடந்த வருடம் நவம்பரில்  பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றார். பிரதமரின் பயணத்தில் பெரும்பாலானவை பல்வேறு நாடுகள் அடங்கிய அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைந்தது.

அதேபோல் ஒரே சமயத்தில் அவர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மோடியின் இந்த பயணங்களால் பல நாடுகளுடனான தொழில், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மேலும் சர்வதேச அளவில் இந்தியாவை முன்னிலைப் படுத்துவதாகவும் நம் நாட்டின் வளங்கள் குறித்து மற்ற நாடுகள் அறிந்து கொள்வதாகவும் அமைந்துள்ளது. இவற்றின் மூலம்  நம் நாட்டில் பல்வேறு துறைகளில் வெளி நாடுகளின் முதலீடு அதிகரித்துள்ளது என்றார்.

Radio