தமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது..! அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது..! அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..

தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட வடகிழக்கில் நடத்தப்படும் சகல நினைவேந்தல்களுக்குமான தடையை நீக்க ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும். என வலியுறுத்தி தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இணைந்து அனுப்பியிருந்த கடிதத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் இதுவரை பதிலளிக்கவில்லை. 

எனினும் அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, நீதிமன்றங்களின் விடயங்களில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட தமது அரசாங்கம் தலையீடு செய்யாது என்று பதிலிளித்திருக்கின்றார். இத்தகைய பின்னணியில் அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான சமிக்ஞை எதனையும் காண்பிக்கவில்லை. 

காண்பிக்கப்போவதும் ஐயமான நிலைமையிலேயே உள்ளது. ஆகவே, நினைவேந்தலை செய்வதற்காக கூட்டாக அனுமதிகோரியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய நான்கு தரப்புக்களும் இன்று நண்பலுக்குப் பின்னர் கூடவுள்ளன.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் நேற்று இரவு எட்டுமணிக்கு பின்னதாக ஏனைய கட்சிகளுடனான சந்திப்புக்கள் மற்றும் அதனை நடத்துவதற்கான நேரம் இடம் ஆகியன தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று முற்பகல் அளவில் அதுதொடர்பான உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்குச் செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரமர் ஆகியோருக்கு அனுப்புவதற்கான கடிதத்தினை இறுதி செய்வதற்கான தமிழ்க்கட்சிகளின் கலந்துரையாடலின்போது அரசாங்கம், 

நினைவேந்தல் உரிமையை மறுக்கும் பட்சத்தில் 25ஆம் திகதி வடக்கு கிழக்கில் பாரிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதென்ற கோணத்தில் ஆரயப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலை முன்னெடுப்பதை மையப்படுத்தியே இன்றையதினம் தமிழ்க் கட்சிகள் கலந்துரையாடவுள்ளதாக அக்கட்சிகளின் முக்கிஸ்தர்கள் சிலர் நம்பிக்கை வெளியிட்டனர். 

அத்துடன் தமிழ்க் கட்சிகளின் இணைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், போன்ற தரப்புக்களும் வரவேற்றுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அத்தரப்பினது ஆதரவினைப் பெறுவதற்கான முஸ்தீபுகள் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ். பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படும் என நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Radio