யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது!

ஆசிரியர் - Admin
யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை சிங்கள அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது!

தமிழ் மக்கள் யாரை அஞ்சலிக்க வேண்டும் என்பதை தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ தீர்மானிக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

“நாகரீக உலகில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மிக மோசமாக தடுக்கும் நாடாக தன்னை ஜனநாயக நாடென கூறிக்கொள்ளும் இலங்கை மாறிவருகின்றது.

இந்த நாட்டின் பூர்வீக குடியில் பிறந்து தான் நேசித்த மக்களுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகள், பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளை திட்டமிட்டு தடுப்பதன் மூலம் இலங்கையின் தற்போதைய அரசு எதை சாதிக்கப் போகின்றது அல்லது தமிழ் மக்களுக்கு எதை கூறவருகின்றது? என்ற கேள்விகளே எழுகின்றது.

இந்த நாட்டின் தேசிய இனமான தமிழர்கள் தாங்கள் தங்களுக்காக இறந்த ஒருவருக்கு பொது இடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட உரிமையில்லாது போகின்ற போது தமிழ் மக்கள் ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் நம்பிக்கை இழப்பது இயல்பானதே.

தமிழர்கள் யாருக்கு அஞ்சலி செலுத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களிடமே உண்டு எனும் மேலாதிக்க போக்கை கடைப்பிடிக்கும் பேரினவாதம் தமது மக்களை மகிழ்விப்பதாக நினைத்து தாம் சார்ந்த மக்களை பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அடிப்படை மனிதநேயமற்ற ஒரு இனமாக வழிநடத்த முற்படுகின்றனர்.

சுய அரசியல் இலாபங்களுக்காக பெரும்பான்மை மக்களை திசைதிருப்பும் இந்த அரசியல் நாகரீகம் எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கே பெரிய சவாலாக மாறும். பின்னர் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொண்டாலும் மக்களை மாற்றமுடியாத நிலை உருவாகும். இதனால் காலாகாலத்திற்கும் இந்த நாடு இனவாத அரசியலையே நம்கியிருக்க வேண்டி வரும்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய மக்கள் விடுதலை முன்னணியின் ரோகண விஜயவீர உள்ளிட்ட சிங்கள கிளர்ச்சியாளர்களை தலைநகர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலும் பெருமெடுப்பில் நினைவுகூர்ந்து பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் நடாத்த அனுமதிக்கும் அரசு தமிழர்களின் நினைவு நிகழ்வுகளை ஒடுக்க நினைப்பது தமிழ் மக்களின் உணர்வுகளுடன் அரசு வேறுபட்டு நிற்பதையே வெளிப்படுத்துகின்றது.

தற்போதைய அரசிற்கு 2020 பாராளுமன்ற தேர்தலில் த கிடைத்துள்ள அறுதிப் பெரும்பான்மை பலத்தை இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும், நிரந்தர தீர்வை உருவாக்குவதற்கும் பயன்படுத்தாமல் தமிழ்மக்களை ஒடுக்குவதற்கும் தமிழ் மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மலினப்படுத்துவற்கும் பயன்படுத்துவதாகவே அமைகிறது.

தமிழ் போராட்ட அமைப்பில் இருந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள், போராட்டங்களில் பங்கேற்று உயிர்நீத்தவர்களின் உறவுகளே இந்த நாட்டில் இன்றும் தமிழர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை கருத்திற்கொள்ளாது நினைவேந்தல் உள்ளிட்ட அனைத்து அஞ்சலி நிகழ்வுகளும் தடுக்கப்படும் நிலை இருப்பதனால் இதற்கான சரியான கொள்கை முடிவை மேற்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் , அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது.”

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு