SuperTopAds

மாகாண கல்வி அமைச்சின் பொறுப்பற்றதனம்..! வீதியில் நின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், ஒழுங்கமைப்பு செய்த கல்வி அதிகாரிகள் கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்..

ஆசிரியர் - Editor I
மாகாண கல்வி அமைச்சின் பொறுப்பற்றதனம்..! வீதியில் நின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், ஒழுங்கமைப்பு செய்த கல்வி அதிகாரிகள் கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் செயலமர்வுக்கு சென்றிருந்த மாணவர்கள் மண்டபத்திற்குள் நுழைய கூட முடியாமல் திரும்பி சென்றிருக்கின்றனர். 

இந்த சம்பவம் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, மாங்குளம் வலய பாடசாலைகளில் க.பொ.த சாதார தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒழுங்கமைப்பட்டது. 

இந்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக பெருமளவு மாணவர்கள் அழைக்கப்பட்டடிருந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்திற்குள் துணுக்காய் வலய மாணவர்கள் இருப்பதற்கு கூட இடம் போதுமானதாக இல்லை. மேலும் சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. 

இந்நிலையில் செயலமர்வுக்கு வந்திருந்த பெருமளவு மாணவர்களும், ஆசிரியர்களும் வீதியில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து துணுக்காய் வலய மாணவர்களுக்கு மட்டும் செயலமர்வு நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வலய மாணவர்களும், ஆசிரியர்களும் திருப்பி அனுப்பபட்டனர். 

இதனால் தொலைதுாரத்திலிருந்து பணம் மற்றும் நேரத்தை செலவு செய்து வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அதேபோல் துணுக்காய் வலய மாணவர்களுக்கும் கூடி சுகாதார நடைமுறைகள் பேணப்படாததுடன், குடிநீர் வசதிகூட செய்யப்படாத நிலை காணப்பட்டுள்ளது. 

மாகாண கல்வி அமைச்சின் பொறுப்பற்ற செயல் காரணமாக இன்று குறித்த மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். சரியான திட்டமிடல் இல்லாத ஒரு கல்வி சமூகம் இவ்வாறு செயற்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு இருக்கின்றனர். 

குறித்த விடயம் தொடர்பில் குறித்த செயற்திட்டத்தை ஒழுங்குபடுத்திய வலயக்கல்வி அலுவலகத்தை சார்ந்த அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மாணவர்களை உரிய சுகாதார நடைமுறைகள் இன்றியும் 

மாணவர்களுடைய பணங்களை வீண் விரயம் செய்யக் கூடிய வகையிலும் திட்டமிட்டு செயற்பாடுகளை செய்யாது அசண்டையினமான ஒழுங்குபடுத்தல் மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.