தீ பரவல் கட்டுக்குள் வந்துள்ளதா..? இந்திய கடலோர பாதுகாப்பு படை தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் கருத்து..
இலங்கை கடற்பகுதியில் தீ பிடித்து எரிந்த பனாமா நாட்டுக்கு சொந்தமான எம்.டி.நியூ டைமன் கப்பலில் தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கின்றது.
அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையில் இருந்து 38 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் இந்தியா நோக்கிச்சென்ற எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டது.
இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்
எம்.டி.நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என விமானப்படை பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க
தெரிவித்த நிலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா கடலோர காவல்படை பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.