SuperTopAds

13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிற்பத்துடன் கூடிய கல்வெட்டு கண்டெடுப்பு!

ஆசிரியர் - Admin
13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த சிற்பத்துடன் கூடிய கல்வெட்டு கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் ஆச்சமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த சீனு, கெங்கன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, செயலாளர் ச.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள் பழனிசாமி, எ.சுதாகர், ஏ.வெங்கடேசன் மற்றும் அலுவலர் பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று பார்வையிட்டு, ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இந்த கல்வெட்டை ஆராய்ச்சி செய்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் கூறியதாவது:- இக்கல்வெட்டு 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்தது. அதாவது கி.பி.1266-ல் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டில் இவ்வூரின் பெயர் ஆதித்தமங்கலம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் திருச்சி அருகே உள்ள திருவானைக்கா உடைய நாயனார் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்தை பராமரிக்க இந்த மன்னன், ஆச்சமங்கலத்தில் நிலத்தை ஒருவருக்கு கொடுத்து, வரிச்சலுகை தந்துள்ளார்.

இந்த நிலத்துக்காக கிடைக்கப்பெரும் வரிச்சலுகை மற்றும் வருவாய் திருவானைக்கா கோவில் நந்தவனத்தை பராமரிக்க கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டின் முன்பக்கம் யானை, நாவல் மரம், சிலந்தி மற்றும் சிவனைக்குறிக்க திரிசூலம் ஆகியவற்றை அழகிய சிற்பமாக வடித்துள்ளனர்.

திருவானைக்கா என்ற புராண கதையின் படி, திருவானைக்காவல் நாவல்மரத்தின் அடியில் இருந்த இறைவன் மீது காய்ந்த இலைகள் விழா வண்ணம் சிலந்தி வலைபின்னி பணி செய்தது. அப்போது பக்தி கொண்ட யானை தினமும் துதிக்கையில் தண்ணீர் எடுத்து வந்து இறைவன் மீது பீய்ச்சி அடித்து வழிபட்டது. இதனால் ஒவ்வொரு முறையும் சிலந்தி கூட்டினை தூசி என்று நினைத்து யானை அதை அழித்தது. இதனால் கோபமடைந்த சிலந்தி யானையைத் தாக்கி வென்றது.

பின்னர் சிலந்தி முத்தி அடைந்து அடுத்த பிறவியில் கோச்செங்கண்ணனாக பிறந்து பல சிவன் கோவில்களை கட்டியதாக புராண வரலாறு கூறுகிறது. இக்கோவில் தல புராணம் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது. திருவானைக்கா என்ற சிவ வழிபாட்டுத்தலக் கதை பிற்காலத்தில் பல இடங்களுக்கு பரவியுள்ளதை இக்கல்வெட்டில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரியவருகிறது.

திருவானைக்கா கோவிலில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆச்சமங்கலத்தில் சிற்பங்களுடன் கூடிய கல்வெட்டு கிடைத்திருப்பது மிக அரிதானதாகும். ஒருபக்கம் கல்வெட்டும், மறுபக்கம் புராணச் சிற்பங்களும் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்ற அரிய சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளை பாதுகாக்கவேண்டும் என்று அப்பகுதி மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் அரசு கோரிக்கை வைத்துள்ளனர்.