SuperTopAds

ராஜீவ் கொலையில் கைதான 7 பேர்: விடுதலையை தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!! -சீமான் வலியுறுத்தல்-

ஆசிரியர் - Editor III
ராஜீவ் கொலையில் கைதான 7 பேர்: விடுதலையை தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!! -சீமான் வலியுறுத்தல்-

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து இறந்த செங்கொடியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் செங்கொடியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சீமான் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்வின் பின் ஊடகவியலாளர் மத்தியல் சீமான் கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

ஆளுநர் கையெழுத்தில் 7 பேர் விடுதலை உறங்கி கிடக்கிறது. கேரளாவில் 7 ஆண்டுகள், தமிழகத்தில் 10 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களை எல்லாம் விடுதலை செய்யலாம். காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தமிழர்கள் என்றால் நஞ்சாக தெரியும்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது வேறு சட்டம் இயற்றி அவர்களை விடுவிக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருப்பது, ஆட்சியில் இருந்து இறங்கும்போது 7 பேர் விடுதலை செய்வது குறித்து பேசுவது என்பது ஏமாற்று வேலை என்றார்.