பிரணாப் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை!! -கைவிரிக்கும் மருத்துவர்கள்-
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிரணாப் முகர்ஜி உடல் நிலையிலை தொடர்ந்தும் மோசமாகவே உள்ளது, இதுவரை எந்த முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் கடந்த 9 ஆம் திகதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இந்நிலையில் அவர் டெல்லி ஆர்.ஆர்.இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே வைத்தியர்கள் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றினர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக வைத்திய சாலையில் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார். எனினும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்றும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அவருக்கு பல இணை நோய் பாதிப்புகள் இருப்பதாகவும் உடல் நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.