SuperTopAds

சீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்..! நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்..! நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றார். 

குறித்த விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 4,424,724.24 பணமும் 

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் பணமும் 1,210.33 டொலர்கள் பணமும் இருக்கின்றன. இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் 

ஒரு துண்டு காணியும், கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன. இவை தவிர அவருக்கு வாகனங்களோ வேறு எந்த சொத்துக்களுமோ இல்லை. 

நீதிபதியாகவும், நீதியரசராகவும் பணி புரிந்தகாலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் உழைத்த பணமும் முதலமைச்சராகப் பணி ஆற்றிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வேதனத்தில் 

ஏற்பட்ட சேமிப்பும் இவற்றுள் அடங்கும்.இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 

232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் 

முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே 

பகிரங்கப்படுத்தப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்திருந்த போதிலும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது சொத்து விபரங்களை 

தேர்தலுக்கு முன்னரேயே மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் 

என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் 

அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.இதேசமயம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டு கட்சிகள் 

செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை 

பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். 

அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான 

செலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.