SuperTopAds

வடமாகாணத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா..! கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு..! உடன் அமுல்படுத்த ஆளுநர் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா..! கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு..! உடன் அமுல்படுத்த ஆளுநர் பணிப்பு..

வடக்கில் விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் செயற்படவேண்டும். என பணித்திருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ், 

பிரதான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவதுடன், கனரக வாகனங்கள் பயணிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஆளுநர் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு பணித்துள்ளார். 

வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்கள் மற்றும் சட்ட ஒழுங்குகளின் நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வட மகாண ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று 

வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள், வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள், 

வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் அண்மைய தினங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஆளுநர், 

தொடர்ச்சியாக விபத்துச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் தொடர்பிலான விளக்கங்களை கோரியிருந்தார். இதன்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்பதையும் 

திட்டவட்டமாக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். இந்நிலையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சாலை விபத்துக்களைத் தவிர்த்து அதனூடாக ஏற்படும் உயிர் இழப்புக்களைத தடுப்பதற்குத் தேவையான அனைத்து விடயங்களையும் 

சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுத்த வேண்டும். உரிய தகவல்கள் கொண்ட வீதி அறிவித்தல் பலகைகள் வைக்கப்பட வேண்டும். கால்நடைகள் வீதிகளில் நடமாடுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வீதிப்புணரமைப்பினை இரவு நேரங்களில் செயற்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெருக்கடிகளையும், விபத்துக்களையும் தடுக்க முடியும். போதுமான அளவிற்கு வாகனத் தரிப்பிடங்களை ஏற்படுத்த வேண்டும். 

முக்கியமான இடங்களில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வீதிகளின் இரு பக்கங்களையும் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்கள் நகருக்குள் உட்பிரவேசிப்பதன் நேரத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும். 

வீதியோரங்களிலுள்ள மரக்கிளைகளை இனங்கண்டு அவற்றை அகற்ற வேண்டும். தொடர் விபத்துக்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்த விடயத்தில் அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.