சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஆசிரியர் - Admin
சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

வவுனியாவில் 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளையை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரோயகம் செய்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஐஸ் கிறீம் வியாபாரி ஒருவருக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயராசா சஜீவன் என்ற நபருக்கே குறித்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஐஸ்கிறிம் விற்பனைக்காக வவுனியாவிற்கு வந்த நிலையில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளையை கடத்தி சென்று ஓமந்தை பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

குற்றவாளி மீது 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளையை கடத்தி சென்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பான இரு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.இவ் வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் 2018-12-17 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இவருக்கான தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் வழங்கப்பட்டது.

சிறுமியை கடத்தி சென்ற குற்றசாட்டிற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும், மூவாயிரம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாலியல் துஷ்பிரோயகம் செய்த குற்றசாட்டிற்காக 13 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய். தண்டப் பணமாக விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த தவறின் 12 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை செலுத்த தவறின் இரண்டு வருடகால சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வவுனியா ஓமந்தைப் பகுதியில் 16 வயதிற்கு உட்பட்ட பெண் பிள்ளையை சித்தப்பா முறையிலான ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான பிறிதொரு வழக்கில் எதிரியான செல்லையா நிதி என்பவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 20-07-2011 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு தொடர்பாக விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஆறாம் மாதம் 24 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.

எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 16 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அதனை செலுத்த தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் அதனை வழங்கத்தவறின் 2 வருடகால சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.