ஆடு மேய்க்க சென்ற 20 வயதான இளைஞன் மீது படையினர் மிலேச்சத்தனமான தாக்குதல்..! தொலைபேசியை பறித்து அடாவடி..
மாந்தை கிழக்கு ஒட்டங்குளம்- பொன்னகர் பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த 20 வயதான இளைஞன் மீது படையினர் தாக்குதல் நடாத்திய நிலையில், உறவினர்களால் மீட்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் மாந்தை பிரிவிற்குட்பட்ட ஒட்டங்குளம்- பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் தனுசன் 20 வயதுடைய இளைஞன்
காட்டுப்பகுதிக்கு காலை ஆடு மேய்ப்பதற்கு சென்றிருந்தார். இதன்போது இளைஞன் மீது படையினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை வீட்டாருக்கு தொியப்படுத்த இளைஞன் முயற்சித்தபோது
மீண்டும் தாக்குதல் நடாத்திய படையினர் அவனுடைய தொலைபேசியை பறித்துச் சென்றதுடன், வனவள திணைக்களத்தினரிடம் இளைஞனை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞன் முழங்காவில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நேற்று இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
ஆலங்குளம் எருவில் பகுதியிலுள்ள படையினரே தன்மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அந்த இளைஞர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார் . மேலும் குறித்த இளைஞன் மேய்க்க கொண்டுசென்ற ஆடுகள் காணாமல் போயுள்ளதாக
துணுக்காய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.