பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களை ஏமாற்றிய வடமாகாண ஆளுநர்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா ஆளுநர் வராததால், கைவிடப்பட்டுள்ளது.
வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா இன்று பிற்பகல் 1 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைப்பார் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்து விட்டு பாடசாலை வளாகத்தில் காத்திருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் ஆளுநர் வராததால் ஏமாற்றமடைந்தனர்.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வடக்கு மாகாண ஆளுநர், பிற்பகல் 1.50 மணியளவில் பாடசாலையைக் கடந்து சென்றுள்ளார்.
இதனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.