காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், முல்லைத்தீவில், 2017 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, கவனயீர்ப்பு போராட்டம், இன்று 1 200 ஆவது நாளை எட்டியுள்ளதை முன்னிட்டே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போரின் முடிவில் சரடைணந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக, உரிய பதிலை வழங்கக் கோரி, நடத்தப்பட்ட இந்த போராட்டம், சுகாதார வழிகாட்டு முறைகளுக்கு அமைய, சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசம் அணிந்து முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கால அவகாசம் வேண்டாம், முறையான நீதி விசாரணை வேண்டும், அப்பா எங்கே என்று கேட்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் பதில் என்ன?, போரின் முடிவில் கையளித்தோர் போரில் இறந்தனர் என்பது பொய் இல்லையா? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
அத்துடன், எங்கே எங்கே உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்றும் அவர்கள் கோசங்களை எழுப்பினர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் அரச புலனாய்வாளர்கள் அதிகளவில் காணப்பட்டதுடன், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காணொளிப் பதிவு செய்து கொண்டனர்.