SuperTopAds

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆவது நினைவேந்தல்!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு- சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆவது நினைவேந்தல்!

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் விமானப்படையின் குண்டுவீச்சு மற்றும் எறிகணை தாக்குதலில், படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொதுமக்களின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இன்று காலை புதுக்குடியிருப்பு பொலிஸார் நிகழ்வுக்கு தடை விதித்து, அதில் பங்கேற்க வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

சுதந்திரபுரம் சந்தி பகுதியிலும், விளையாட்டுக்கழக மைதானத்தை சூழவும் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளம் இந்து மயானத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நான்கு பிள்ளைகளை பறிகொடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து புஸ்பராசா என்பவர், பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மலர் வணக்கமும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கனகராசா ஜீவராசா மற்றும் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் குழுவின் தலைவர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.