SuperTopAds

490 ஏக்கர் தமிழ் மக்களின் விவசாய நிலத்தை பிடுங்க வனவள திணைக்களம் அடாவடி..! நோில் சென்ற ரவிகரன், சாள்ஸ்..

ஆசிரியர் - Editor I
490 ஏக்கர் தமிழ் மக்களின் விவசாய நிலத்தை பிடுங்க வனவள திணைக்களம் அடாவடி..! நோில் சென்ற ரவிகரன், சாள்ஸ்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான எரிஞ்சகாடு, சகலாத்துவெளி கிராமங்களில் வனவள திணைக்களம் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் நோில் பார்வையிட்டுள்ளனர். 

இன்று துரைராசா ரவிகரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், விவசாய நிலங்களுக்குரிய தமிழ்மக்களையும், அப்பகுதிக்குரிய வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்களையும் அழைத்துச் சென்று குறித்த எரிந்த காடுவிவசாய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த எரிந்தகாடு விவசாய நிலங்களில், 

கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்ந தமிழ் மக்கள், இடம்பெயர்வதற்கு முன்னரும், மீள்குடியேற்றப்பட்ட காலப்பகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக மானாவாரி நெற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.இந் நிலையில் தற்போது குறித்த எரிந்த காடு விவசாய நிலங்களை, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் துப்பரவு செய்வதற்கு எதற்காக 

தடைவிதிக்கின்றீர்கள் என ரவிகரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரால், அங்கு வருகைதந்த வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.குறித்த தமிழ் விவசாயிகளுக்குரிய காணிகள்தான் எரிந்தகாடு விவசாய நிலங்களென, கரைதுறைப்பற்று பிரதேசசெலர் உறுதிப்படுத்துவார் எனில், 

கொக்குத்தொடுவாய்ப் பகுதி தமிழ் மக்கள் எரிந்தகாடுப் பகுதியில் விவசாயநடவடிக்கைளில் ஈடுபடுவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென வனவளத் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் எதிர்வரும் திங்களன்று, கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலருடனும், 

உரிய அதிகாரிகளுடனும் பேசி இது தமிழ் மக்களுக்குரிய காணிகள்தான் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரவிகரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.மேலும் குறித்த எரிந்தகாட்டுப் பகுதியில் 121 தமிழ் மக்களுக்குரிய, 490ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.