சத்தமில்லாத மிகப்பெரும் ஆக்கிரமிப்பு திட்டத்திற்குள் அகப்பட்டிருக்கிறோம்..! வடக்கு மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்..
முல்லைத்தீவு மாவட்டத்தில், வட்டுவாகல் மற்றும் நந்திக்கடல் ஆகிய பகுதிகளை வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவம், கடற்படை, இராணுவம், தொல்லியல் திணைக்களம் என்பன ஒன்று சேர்ந்து ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இத்தகைய அபகரிப்பு நிலைமைகளுக்கு சர்வதேசம் உரிய பதிலை வழங்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பான ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சத்தமின்றி வட்டுவாகல் மற்றும் நந்திகடல் என்பன பறிபோய்க்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் 468குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வட்டுவாகல் கிராமத்தில் மாத்திரம் 271 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
வட்டுவாகல் வரலாறு
வட்டுவாகல் கிராமத்தில்1817ஆம் ஆண்டு 117 தமிழ் மக்கள் வாழ்ந்ததாக, ஜே.பி லூயிஸ் அவர்களுடைய வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் 1839ஆம் ஆண்டு 162தமிழ் மக்கள் வட்டுவாகல் பகுதியில் வாழ்ந்ததாகவும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் கணப்படுகின்றன.
இப்படியிருக்கும்போது தனித் தமிழ் மற்றும் சைவக் கிராமமான வட்டுவாகல் கிராமம் மற்றும் நந்திக்கடல் என்பன தற்போது சுற்றி வளைக்கப்பட்டு, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்பட்டிருக்கின்றன.
தொல்லியல் திணைக்களம் அபகரிப்பு
குறிப்பாக தொல்லியல் திணைக்களம் தனது ஆக்கிரமிப்பை இப்பகுதியில் மேற்கொண்டுள்ளது. 2009 முன்பு முல்லைத்தீவு மாவட்டதில் எவ்வித விகாரைகளும் இருந்ததில்லை. 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோது, தனித் தமிழ்க் கிராமமான வட்டுவாகலில்,
ஒரு பௌத்த சிங்கள மக்கள் வசித்திராத அக் கிராமத்தில், பாரியதொரு விகாரை தொல்லியல் திணைக்களத்தால் அமைக்கப்பட்டிருக்கின்றது. வட்டுவாகல் கிராமத்தை அபகரிக்கும் நோகுடனும், படிப்படியாகத் தமது ஆளுகைக்குள் குறித்த கிராமத்தினை
கொண்டுவரும் நோக்குடனேயே இத்தகைய செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இராணுவ அபகரிப்பு
இதேவேளை அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரையினைச் சுற்றி 100ஏக்கர் அளவில் காணிகள் அபரிக்கப்பட்டு இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.
கடற்படையின் அபகரிப்பு.
இவ்வாறிருக்கும்போது Mu/dso/2014/003/1 ஆம் இலக்க வரைபடத்திற்கமைவாக 617ஏக்கர் காணிகளை அபகரித்து கடற்படைத் தளம் ஒன்று அமைக்ப்பட்டிருக்கின்றது.நிச்சயமாக அவ்வாறு கடற்படை முகாம் நிறுவப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் வட்டுவால்,
மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய காணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அபகரிப்பு
இதனைவிட 2017.01.24ஆம் திகதிய வர்த்தமானிமூலம் வன ஜீவராசிகள் திணைக்களம் 4141.67 ஹெக்டயர் நிலப்பரப்பை(கிட்டத்தட்ட 10230ஏக்கர்) நிலப்பரப்பை அவர்கள் தமது பங்கிற்கு தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர்.
குறிப்பாக நந்திக் கடலையும், நந்திக்கடலோடு சேர்ந்த பகுதிகளையும் அவ்வாறு அபகரித்திருக்கின்றனர். இப்படியாக வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவ முகாம்,
கடற்படைத் தளம் இது தவிர தொல்லியல் திணைக்களம் என்பன சேர்ந்து இந்த சிறியகிராமத்தையும் அதனை அண்டிய நந்திக்கடலையும் விழுங்கிவைத்திருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
அபகரிப்பிற்கு எதிராக போராடினால் கைது மற்றும் வழக்கு விசாரணை
குறித்த பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள சுமார் 617ஏக்கர் காணிக்காக நாம் மக்களுடன் சேர்ந்து தொடர் போரட்டங்களில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் அந்த போராட்டங்களுக்கு எதுவித பலன்களும் கிடைக்கவில்லை.
மாறாக காவற்றுறையினர் காணி மீட்பிற்காக போராடிய எம்மை கைது செய்தனர். அதற்குரிய வழக்கு விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
சர்வதேசம் பதில்சொல்ல வேண்டும்.
தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக இருந்தவர்கள், தற்போது இல்லாத நிலையில் தற்போது எம்மைச் சுற்றிவளைத்துக்கொண்டிருக்கின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. இதைச் சர்வதேசம் எந்தவகையில் பார்த்துக்கொண்டிருக்கின்றது
என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது.பல வடிவங்களில் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றது.எமது இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் மீதமாக எஞ்சியுள்ள எமது மக்களின்
வாழ்வாதாரமாக உள்ள நந்திக்கடலின் ஒரு பகுதியினை கடற்படையினரும், மறு பகுதியினை இராணுவத்தினரும், நந்திக்கடல் முழுவதையும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் ஆக்கிரமித்துள்ள நிலைமையும், அத்தோடு அப் பகுதியினை
பௌத்த சிங்கள பகுதியாக மாற்றுவதற்கு தொல்லியல் திணைக்களம் முனைகின்ற ஆக்கிரமிப்பு நிலைமைகளையே காண முடிகின்றது.நிச்சயமாக இதற்கு சர்வதேசம் சரியானதொரு பதிலைச் சொல்லவேண்டும் என்றார்.