பங்களாதேஷின் 193 ரன்களை அதிரடியாக கடந்து இலங்கை சாதனை

ஆசிரியர் - Admin
பங்களாதேஷின் 193 ரன்களை அதிரடியாக கடந்து இலங்கை சாதனை

பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூர் ஷியரே பங்ளா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 6 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.

சர்வதேச இருபது 20 ஒருநாள் போட்டி ஒன்றில் பங்களாதேஷினால் பெறப்பட்ட அதி கூடிய மொத்த எண்ணிக்கையான 193 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து அதிரடியாக 194 ஓட்டங்ளைக் குவித்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடரில் 1 க்கு 0 என இலங்கை முன்னிலை வகிக்கின்றது.


துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் 4.5 ஓவர்களில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.


தனுஷ்க குணதிலக்க 15 பந்துகளில் 6 பவுண்ட்றிகளுடன் 30 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 2 சிக்கர்கள், 8 பவுண்ட்றிகள் அடங்கலாக 53 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்..

தொடர்ந்து உப்புல் தரங்க (4), நிரோஷன் திக்வெல்ல (11) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.


11.4 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் தசுன் ஷானக்கவுடன் ஜோடி சேர்ந்த முன்னாள் அணித் தலைவர் திசர பெரேரா வீழ்த்தப்படாத ஐந்தாவது விக்கெட்டில் 30 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

தசுன் ஷானக்க 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்ட்றிகள் அடங்கலாக 42 ஓட்டங்களுடனும் திசர பெரேரா 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்ட்றிகளுடன் 39 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைக் குவித்தது. இதற்கு முன்னர் அயர்லாந்துக்கு எதிராக 2012இல் பெற்ற 5 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் என்பதே பங்களாதேஷின் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.


ஆரம்ப வீரர் ஸக்கிர் ஹசன் 10 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்த போதிலும் ஆரம்ப விக்கெட்டில் 4 ஓவர்களில் 49 ஓட்டங்ளை சௌம்ய சர்க்காருடன் பகிர்ந்தார்.

தொடர்ந்து சர்க்கார் (32 பந்துகளில் 51 ஓட்டங்கள்), முஷ்பிக்குர் ரஹிம் (44 பந்துகளில் 66 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 37 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.


மத்தியவரிசையில் பதில் அணித் தலைவர் மஹ்முதுல்லாஹ் 31 பந்துகளில் 41 ஒட்டங்களை விளாச மொத்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இலங்கை பந்துவீச்சில் மூன்று வருடங்களின் பின்னர் சர்வதேச இருபது 20 போட்டியில் விளையாடும் ஜீவன் மெண்டிஸ் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார் ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு