இருபதுக்கு இருபது மூன்றாவது தொடரிலும் வெற்றிக்கான நம்பிக்கையில் இலங்கை
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் பெரும் பின்னடைவை எதிர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, இவ் வருட ஆரம்பத்தில் இரண்டு வெற்றிகளுடன் புத்தெழுச்சி பெற்றுள்ள அணியாக முன்னேற்றம் அடைந்துள்ளது.பங்களாதேஷில் கடந்த மாதம் நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்பியனான இலங்கை, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரை 1–0 எனக் கைப்பற்றியது.
இந்த இரண்டு வெற்றிகளைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை இன்று எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி டாக்காவில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இருவகை தொடர்களில் வெற்றியீட்டிய இலங்கை மூன்றாவது வகையான சர்வதேச இருபது 20 தொடரிலும் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை அணி திகழ்கின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதையிலிருந்து மீளாத நிலையில் அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் இந்தத் தொடரில் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று பங்களாதேஷின் வழமையான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் உபாதையிலிருந்து மீளாததால் மஹ்முதுல்லாஹ் பதில் தலைவராக அணியை வழிநடத்தவுள்ளார்.
மும்முனைத் தொடரின் இறுதிப் போட்டியில் அறிமுக வீரராக ஹெட் ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷன்கவும் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றார். இவர் பெரும்பாலும் சர்வதேச இருபது 20 போட்டியிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் இ20 குழாத்தில் ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் இடம்பெறும் சிரேஷ்ட வீரரும் சகலதுறை வீரருமான ஜீவன் மெண்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது இவ்வாறிருக்க உபாதையிலிருந்து பூரண குணமடையாத அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள குசல் மெண்டிஸ் அணியில் இடம்பெற்றால் பெரும்பாலும் பின்வரிசையில் துடுப்பெடுத்தாட வேண்டி வரலாம்.
இலங்கை துடுப்பாட்ட வரிசையில் தனுஷ்க குணதிலக்க, உப்புல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), அசேல குணரட்ன, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், தசுன் ஷானக்க, அக்கில தனஞ்சய, ஷெஹான் மதுஷன்க, இசுறு உதான ஆகியோர் இடம்பெறலாம் என கருதப்படுகின்றது.
பங்களாதேஷ் குழாம்
மஹ்முதுல்லாஹ்(அணித் தலைவர்), தமிம் இக்பால், நஸ்முல் இஸ்லாம், அபு ஹைதர், அபு ஜயெத், அபிப் ஹொசெய்ன், ஆரிப்உல் ஹக், மெஹெதி ஹசன், மொஹமத் சய்புதின், முஷ்பிக்குர் ரஹிம், முஷ்தாபிஸுர் ரஹ்மான், ருபெல் ஹொசெய்ன், சபிர் ரஹ்மான், சௌம்யா சர்க்கார், ஸக்கிர் ஹசன்.