SuperTopAds

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை: முன்னாள் அமைச்சர் சுபைர் வாழ்த்து !!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை: முன்னாள் அமைச்சர் சுபைர் வாழ்த்து !!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

அவ்வறிக்கையில் மேலும்,

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் அண்மையில் வெளியிட்டது. குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் இம்முறை அதிகூடுதலான மாணவர்களை சித்தியடையச் செய்து வரலாற்றுச் சாதனையினை நிகழ்த்தியுள்ளது. குறித்த சாதனையை நிகழ்த்தி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றேன்.

குறிப்பாக, க.பொ. த. சாதாரண தரப்பரீட்சையில் கடந்த வருடம் 60 மாணவர்கள் மாத்திரமே 9ஏ சித்திகளைப் பெற்றிருந்த போதிலும், இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

குறித்த பெறுபேற்றின் பிரகாரம் நாட்டிலுள்ள 97 கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது 42வது இடத்தினை வகித்துள்ளது. கடந்த வருடம் தேசிய மட்டத்தில் 57வது இடத்தினை வகித்த இவ்வலயமானது இம்முறை 42வது இடத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இவ்வாறான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியப் பெருந்தகைகளின் மகத்தான பணியினை போற்றுகின்றேன். ஆசிரியர்களின் அயராத உழைப்பு, சிறந்த வழிகாட்டல்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலைகளின் கல்வி அடைவுகளை அதிகரிப்பதற்கு, அவ்வலயம் பல்வேறு விசேட செயற்திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவதனை நன்கறிவேன்.

எமது பிரசேத்தின் கல்விமான்கள், புத்திஜீவிகளின் சிந்தனையிலும், அரசியல் தலைவர்களின் முயற்சியினாலும் உருவான இத்தனியான கல்வி வலயம் அதன் உருவாக்கத்திலிருந்து தேசிய ரீதியில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய போதிலும், கடந்த ஒரு சில வருடகாலமாக கல்வியில் மிகவும் பின்தள்ளப்பட்டு காணப்பட்டது. இந்நிலையில் குறித்த வலயத்தினை பணிப்பாளர் உமர் மௌலானா பொறுப்பேற்று, அதிபர், ஆசிரியர்களை சிறந்த முறையில் வழிநடாத்தி பொறுப்புடன் செயற்பட்டதன் விளைவாக அந்த வலயம் முன்னேற்றமடைந்து வருகின்றது.

குறிப்பாக தற்போது குறித்த வலயத்தினுடைய கல்வி அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்ற வலயக்கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பாடசாலைச் சமூகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். எதிர்காலத்திலும் இக்கல்வி வலயமானது சிறந்த பெறுபேறுகளைப்பெற்று முன்னேற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்றார்.