மட்டக்களப்பில் பிசிஆர் சோதனை - 4 பேருக்கு தொற்று உறுதி!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி காலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டு. போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோய் பரிசோதனையான பி.சி.ஆர் உபகரணம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 143 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளோம் இதனிடைய திங்கட்கிழமை மேற்கொண்ட பரிசோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் ஏனைய மூவர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களுமாவர்.
அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .இதேவேளை இதுவரைக்கும் எமது வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோய் சந்தேகத்தில் 101 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 8 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் ஒருவர் சமூகத்தில் இருந்து வந்தவர் அவர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார். அதேவேளை ஏனையவர்கள் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் இருந்து வந்தவர்கள் அவர்களும் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.