மன்னாரில் சனி, ஞாயிறு தவிர்ந்த நாட்களில் ஊரடங்கை தளர்த்த பரிந்துரை!
மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை சனி, ஞாயிறு தவிர்ந்த ஏனைய ஐந்து நாட்களும், பகலில் 12 மணிநேரம் தளர்த்துவதற்கு, மாவட்ட அரசாங்க அதிபரால், ஜனாதிபதிக்கு அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்ராஸ்,
' நிலைமைகள் சாதகமாக இருந்தால், வரும் 20ஆம் திகதியில் இருந்து, காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்றும், வீடுகளை விட்டு ஒருவர் அல்லது இருவரை மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பது என்றும், சுழற்சி முறையில் கடைகளை திறக்க அனுமதி அளிப்பது எனவும், அரச பணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை மட்டும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.