அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!
அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் எமது மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்து வருகின்றோமே தவிர ஒருபோதும் நாம் எமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்படுத்தவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் -
இங்குள்ள மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமது உறவினர், நண்பர்கள், நலன்புரி நிலையங்களில் வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்து அவர்கள் பட்ட துன்ப துயரங்களை நான் நன்கறிவேன்
அதனடிப்படையில்தான் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டிற்கமைய இந்த மக்கள் அனைவரும் தமது சொந்தக்காணிகளில் வாழவேண்டும் என்ற உறுதியுடன் அப்போதைய அரசுடன் கலந்துரையாடியது மட்டுமன்றி வலியுறுத்தி உங்களை இங்கு குடியேற்றியிருந்தேன்.உங்களை மீள குடியேற்றியது மட்டுமன்றி உங்களுக்கான அடிப்படை பிரச்சினைகளையும் ஓரளவுக்கேனும் தீர்த்துவைத்திருக்கின்றேன்.
ஆனால் தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் முகமூடிகளை அணிந்தவாறும் பல கோஷங்களை முன்வைத்துக்கொண்டு பல போலித் தேசியவாதிகள் உங்களிடம் வருவார்கள்.
அவ்வாறு வந்தவர்களை நம்பி வடக்கு மாகாணசபைக்கு வாக்களித்த மக்கள் இன்று அதன் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் குறைகூறி வருகின்றார்கள். அவர்களால் நடப்பது ஒன்றுமில்லை என்றும் மக்கள் இன்று உணர்ந்துள்ளனர். இனிமேலும் அவர்களது வாய் ஜாலங்களுக்கு நீங்கள் எடுபட்டுப்போகாது சரியான பாதையில் உண்மையான உழைப்பை வழங்கும் அரசியல் கட்சியான எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு உங்களது ஆதரவை வழங்கவேண்டும் என்றும் நான் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.