காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவிப்பு!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இதற்கென எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜன் அவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, இந்தியாவிலிருந்து சுற்றிவளைத்து - நீண்ட தூரமெடுத்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எமது மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், நேரடியாக, இலகுவாக, குறுகிய காலகட்டத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்வதன் மூலம், எமது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், எமது நாட்டில் தென்பகுதிக்கான பாரிய சந்தைவாய்ப்பினையும் எமது மண்ணில் உருவாக்கிட முடியும். இதன் மூலமாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை மெம்படுத்துவதுடன், எமது வர்த்தக சமூகத்தினர் வருமானமும் அதிகரிக்கும். இத் திட்டமானது எனது நீண்ட நாள் கனவாக இருக்கின்றது.
அந்த வகையில், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்த காலத்தில், நான் இந்தியா சென்றிருந்தபோது, எனது கோரிக்கையை ஏற்று இந்திய அரசு காங்கேசன்துறை துறைமுகத்தை அகழ்ந்து, அப்பகுதியினுள் இருந்த கழிவுகளை அகற்றி, சுத்தஞ் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எம்மால் இத்துறைமுகம் தொடர்பிலான மேலதிக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க இயலாது போய்விட்டது.
இந்த நிலையில், இந்திய அரசு மேற்படி துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏற்கனவே, இந்திய அரசானது எனது கோரிக்கையினை ஏற்று 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை வழங்கியதோடு மட்டுமல்லாது, எனது அமைச்சின் கீழிருந்த வடகடல் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்களையம், முலப் பொருட்களுக்கான முதலீடுகளையும் வழங்கியிருந்தது. பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் புனரமைத்து, நவீன இயந்திரங்கள், வாகனங்கள் என்பவற்றை வழங்கியிருந்தது. வடக்கிற்கான ரயில் பாதை, யாழ்ப்பாண கலாசார நிலையம், துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு உள்ளிட்ட ஏராளமான பணிகளை எமது மக்களுக்கான முன்னெடுத்துள்ளதுடன், எமது விவசாய மக்களுக்கு உழவு இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் எனப் பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. அந்த வகையில், எமது மக்களுக்கென இந்திய அரசு நிறையவே உதவியிருக்கின்றது.
இந்திய அரசு தொடர்ந்தும் எமது மக்களுக்கென செய்து வருகின்ற உதவிகளுக்கு எமது மக்கள் சார்பாக தனது நன்றி இந்திய அரசுக்கு உரித்தாகும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.