SuperTopAds

நடிகர் சங்க தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!

ஆசிரியர் - Editor III
நடிகர் சங்க தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தலை மீண்டும் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார். 

நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.