SuperTopAds

மஹிந்தவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!

ஆசிரியர் - Admin
மஹிந்தவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் பாராளுடன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற இருப்பதாக அறிய வருகிறது

அதேவேளை, வடக்கு- கிழக்கில் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நாளை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாட முடியுமென தம்மிடம் பிரதமர் தெரிவித்ததாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிம்மாசன உரையையடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போதே மேற்படி கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் மாவை சேனாதிராஜா எம். பி.மேலும் தெரிவிக்கையில்:

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் அது தொடர்பில் எமது முழுமையான கவனத்தை செலுத்தியுள்ளோம். அதற்கிணங்கவே யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.

கடந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் அது தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை. என்பதை அவரது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக 10 இலட்சம் ரூபா செலவில் 10 ஆயிரம் வீடுகள், காணி விடுவிப்பு தொடர்பிலும் அவருக்கு விளக்கினேன்.

குறிப்பாக பலாலி விமான நிலையத்திற்கு கிழக்குப் பிரதேசம் மற்றும் மயிலிட்டி பகுதிகளில் இன்னும் 2500 குடும்பங்களை மீள் குடியேற்ற வேண்டியுள்ளது. அத்துடன் ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அம் மக்கள் வீடில்லாமலும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்காகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் அதனையடுத்து நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் அது தொடர்பில் விளக்கியதாகவும் மாவை சேனாதிராஜா எம். பி. மேலும் தெரிவித்தார்.