கோட்டாவுக்கு எதிரான தமிழர்களின் தீர்மானம் சரியானதே..! டக்ளஸ் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைக்கப்போகிறார்..?
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தமை மிக சரியான தீர்மானமே என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கோ ட்டாவுக்கு வால் பிடித்தவர்கள் மூஞ்சையை எங்கே வைப்பார்கள் எனவும் கேட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் நிலமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தினார்.இதன்போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சரவை பதவி வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது கட்சியினுடைய கொள்கை, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பதை நெடுங்காலமாகச் சொல்லி வருகிறார். ஆனால்,
அவருடைய தலைவர்- அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதனை முற்றுமுழுதாக நிராகரித்து வருகிறார். சமஷ்டியை மட்டும் புறக்கணிக்காமல் அதிகாரப் பகிர்வு என்பது தேவையற்ற ஒன்று – சாத்தியமற்ற ஒன்று
என்று ஜனாதிதி தெரிவித்து வருகிறார். எனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா, தான் அந்த அமைச்சரவையில் இருக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.
போர் முடிந்ததும் முழுமையான அதிகார பகிர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வாக்குறுதி வழங்கியே அவர்களின் ஆதரவை மகிந்த ராஜபக்சே பெற்றிருந்தார். ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை.
தற்போது அவரது தம்பி ஜனாதிபதியான நிலையில் அதிகார பகிர்வு வழங்க முடியாது என கூறியுள்ளார். பெரும்பான்மையினர் ஏற்காத எதனையும் செய்ய முடியாது என சொல்கின்றார். நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால்
அது பெரும்பான்மையானவர்களுக்கே நன்மை. அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை. ஆனால் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.