கோட்டபாய - மஹிந்த இடையில் வெடிக்கப்போகும் போா்..!
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் பிரதமா் மஹிந்தவுக்கும் இடையில் நிச்சயம் மிக விரைவில் முறுகல் வெடிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு அடித்து கூறுகின்றது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
அரசியல் அமைப்பின் 19வது திருத்த சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
19வது திருத்த சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 19வது திருத்த சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தெரிவித்து,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், பிரதமராக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மகிந்த ராஜபக்ச, அதிகாரங்கள் அற்ற பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பமாட்டார்.
இந்நிலையிலேயே, 19வது திருத்த சட்டத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளினால் அவர்களுக்குள்ளேயே பிரச்சினை வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதனையும் மீறி 19வது திருத்த சட்டத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக எதிர்த்து நிற்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.