சஜித் பிரச்சாரக் கூட்டத்தில் மனோ கணேசன் - றிசாட் பதியுதீன் ஆதரவாளர்களிடையே முறுகல்!
மன்னாரில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இன்று (08) காலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முறுகல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிஷ்கான் பதியூதின் இந்தப் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அவருக்கும் அமைச்சர் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டது.
மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது உள்ளிட்ட விடயங்களில் நேற்று (07) இரவு முதல் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.
இன்று காலை பிரசார மேடையில் ஜனகன் விநாயகமூர்த்தி அமர்வதற்கு இடம் ஒதுக்க ரிஷாட் அணியினர் மறுப்பு தெரிவித்தை அடுத்து முறுகல் வாய்த் தர்க்கமாக மாறியது.
மேலும், இக்கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமைக்கு மேடையில் நன்றி தெரிவித்தார்.
இந்த விடயமும் அமைச்சர் ரிஷாட் பதியுதின் அணியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இவர்களின் முறுகல் நிலை காரணமாக கூட்டத்திற்கு சென்ற பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர் எனவும் தெரியவருகின்றது.