SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 538 டெங்கு நோயாளா்கள்..! ஆளுநா் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 538 டெங்கு நோயாளா்கள்..! ஆளுநா் செயலகத்தில் விசேட கலந்துரையாடல்..

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம் , வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் , மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 

பிராந்திய பணிப்பாளர்கள் , வடமாகாண சிரேஷ்ட பொது சுகாதார அதிகாரி, யாழ் மாவட்ட பொதுசுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ் மாவட்டத்தில் பூரண கட்டுப்பாட்டில் 

இருந்த டெங்கு தாக்கமானது செப்டம்பர் மாதம் வரை கட்டுப்பாட்டில் இருந்துடன் ஒக்டோபர் மாதம் சடுதியான அதிகரிப்பை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் டெங்கின் தாக்கம் ஆரம்பித்ததாகவும் , வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் 

அவர் மேலும் குறிப்பிட்டார்.கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் டெங்கின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதுடன் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலே அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். டெங்கின் தாக்கம் செப்டம்பர் மாதம் 154 ஆகவும் ஒக்டோபர் மாதம் 

538 ஆகவும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.அத்துடன் வடமாகணத்தில் டெங்கு தாக்கத்தினால் 2017 ஆம் ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 

2018ஆம் ஆண்டு 4 ஆக குறைவடைந்துள்ளது. 2019 டெங்கு தாக்கத்தினாலான இறப்பு பூச்சியமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் வவுனியா சூசையப்பர் குள பிரதேசம் மற்றும் மூன்றுமுறிப்பு பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகளவில் பரவும் இடமாக காணப்படுவதாகவும் மரக்காலைகள் 

மற்றும் கடைகளில் அதிகளவில் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும் வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார்.இதன்போது டெங்கு பரவலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் 

ஒவ்வொரு வாரமும் பிரதேச செயலக ரீதியாகவும் ஒவ்வொரு மாதமும் மாவட்ட செயலக ரீதியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழான மன்றங்கள் மற்றும் சபைகள் அவர்களுடன் இணைந்து டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான 

நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்களின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.டெங்கு நோய்க்கு காரணமான நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கௌரவ ஆளுநர் வடமாகாண பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.