SuperTopAds

இரு ஊா்களின் கனவுக்கு உருவம் கொடுத்த ரவிகரன்..! 40.58 மில்லியனில் பாாிய அபிவிருத்தி..

ஆசிரியர் - Editor I
இரு ஊா்களின் கனவுக்கு உருவம் கொடுத்த ரவிகரன்..! 40.58 மில்லியனில் பாாிய அபிவிருத்தி..

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் கற்சிலைமடு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கின்ற இணைப்புப் பாலத்தினுடைய நிர்மாணப்பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கிராம மக்களின் கோரிக்கைக்கமைய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் பரிந்துரையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் விசேட நிதிஒதுக்கீட்டின் மூலம் 

ரூபாய் 40.58மில்லியனில் இப் பாலத்தினுடைய நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இந் நிலையில் இந்த பாலத்தினுடைய நிர்மாணப் பணிகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 

நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,மிகவும் பின்தங்கிய பகுதியான முத்துஐயன்கட்டு,இடதுகரைப் பகுதியில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. 

இங்குள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குமான முக்கியமான பாலமாக பத்துக்கண் பாலம் எனப்படும் பாலம் கடந்த 1974ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இப்பகுதியில் வசிக்கின்ற 600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உபயோகிக்கின்ற மிக முக்கியமானதொரு பாலமாக, குறித்த பத்துக்கண் பாலம் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த பத்துக்கண் பாலம் கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் முத்துஐயன் கட்டுக் குளத்திலிருந்து வரும் நீராக இருந்தாலும்சரி, 

ஏனைய வெளி இடங்களிலிருந்து வரும் நீராக இருந்தாலும்சரி இந்த பத்துக்கண் பாலத்தினை கடந்துபோக முடியாமல், பாலத்திற்கு மேலால் வெள்ளம் 10அடி உயரத்திற்கும் அதிகமாக வீதியை மூடி மழைக்காலங்களில் 

வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் மழைக்காலங்களில் பாலத்தின் அருகிலுள்ள தோட்டங்கள், வீடுகளுக்குள்ளேயும் வெள்ள நீர் உட்புகும்புகும் நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1983ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக வெள்ள நீர், குறித்த பத்துக்கண் பாலத்திற்கு மேலால் பாய்ந்ததாகவும், அதன் பின்னரான காலப்பகுதிகளில் வாரக்கணக்கில் நீர் வீதியை மூடி 

பாய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே மழைக் காலத்தில் அத்திய அவசிய தேவைகளுக்குக்கூட பத்துக்கண் பாலத்தினைக் கடந்து செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டுவந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக திசம்பர் மாதங்களில் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர்.அத்துடன் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களை பாரமரிக்கும் 

விவசாயிகள்கூட இந்தப் பத்துக்கண் பாலத்தினை கடந்துபோகவேண்டியிருப்பதால், பலத்த சிரமங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தெரிவித்தனர்.இது தொடர்பாக தாம் கடந்த காலங்களில் எல்லா முயற்சிகளை எடுத்திருந்தும்,

 பலரிடம் இது தொடர்பில் பேசியிருந்தும் நிதிப் பற்றாக்குறையைக் காரணங்காட்டி செய்யாமல் விடப்பட்டிருந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2018 வெள்ளப்பெருக்கின்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 

இங்கு நேரில் வந்து நிலமைகளை பார்வையிட்டிருந்ததாகவும், அவரிடம் தமது கிராமங்களுக்கிடையிலான இணைப்பு பாலம் தொடரபில் மகஜர் கையளித்திருந்ததாகவும், து.ரவிகரன் 

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடாக இதற்குரிய வேலைகளைச் செய்து தருவதாக உறுதியளித்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.இந் நிலையில் குறித்த பாலத்தினை 

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கடந்த 16.02.2019 அன்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், 

புதிய இணைப்புப் பாலம் ஒன்றினை அமைத்துத் தருவதாவும் உறுதியளித்துச் சென்றுள்ளனர்.அந்த வகையில் புதிய இணைப்புப் பாலத்திற்குரிய நிதிஒதுக்கீடுகள் செய்யப்பட்ட நிலையில், பாலத்தின் நிர்மாணப் பணிகள் 

கடந்த 06.10.2019 அன்று பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்பாது துரிதகதியில் இடம்பெற்றுவருகின்றன.மேலும் இது தொடர்பில் முள்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கனகரத்தினபுரம் மற்றும் கற்சிலைமடுவிற்கான இணைப்புப் பாலம் தொடர்பில், கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின்போது, 

குறிப்பாக கனகரத்தினபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராலும் ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் தெரிவிக்கப்பட்டது.இந்தப் பாலம் கடந்த 1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் இணைப்புப் பாலம் 

சீரின்றிக்காணப்பட்டமையால், மூன்றுபேர் நீரில் மூழ்கியது தொடக்கம், இணைப்புப்பாலம் சீரின்றிக் காணப்படுவதால் தாம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நான் தெரியப்படுத்தியிருந்தேன்.அந்தவகையில் அவரின் விசேட நிதி ஒதுக்கீட்டினூடாக, உரூபாய் 40.58மில்லியன் நிதி 

ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து இணைப்புப் பாலத்தினுடைய நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.அத்தோடு இந்த நிதியினூடாக இரண்டு கிலோமீற்றர் தூரமான வீதியும் சீரமைக்கப்படவுள்ளது.

இன்னும் பதினைந்து நாட்களில் இந்த இணைப்பு பாலத்தினுடைய நிர்மாணப் பணிகள் நிறைவுறும் என்றும் பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

எனது கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீட்டை செய்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, இதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இவ்வாறான மிகவும் பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களினுடைய பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில், பங்கெடுத்தமையிட்டு மனம் நிறைவடைகின்றது. தனது மக்களுக்கான பணி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.