ஜனாதிபதி தோ்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன..? சம்மந்தன் முக்கிய அறிவிப்பு..
ஜனாதிபதி தோ்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்பது தொடா்பாக அறிவிப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் என தொிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில், தமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம் என
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும். அதற்கான கருமங்கள் நடைபெற்றவண்ணமுள்ள நிலையில்
இந்த விடயத்தில் நாம் நிதானமாக செயற்படுவதற்கு தலைப்பட்டுள்ளோம். பிரதானமாக உள்ள மூன்று கட்சிகளில் இரண்டு வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
ஏனைய தரப்பும் அடுத்துவரும் நாட்களில் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனையடுத்தே எமது தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படும்.தமிழ் மக்களின் எதிர்காலத்தினையும் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
எமது மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமாக சிந்தித்து வாக்களிப்பதற்குரிய கால அவகாசத்தினை கூட்டமைப்பு நிச்சயமாக வழங்கும்.தபால் மூல வாக்களிப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில்,
அதற்கு முன்னதாக எமது அறிவிப்பினை வெளியிடுவதற்குரிய அதியுச்சமான பிரயத்தனங்களை செய்வோம்” என மேலும் தெரிவித்தார்.