சஜித்தை ஆதரிக்க வேண்டும் - சம்பந்தனிடம் கோரிய ரணில்!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான தமிழ் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கோரியுள்ளார். தமிழர் தரப்புடன் சகல விதத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பொது இணைக்கப்பாட்டை எட்ட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு பதில் தெரிவித்த சம்பந்தன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளடக்கிய புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுங்கள். அதன் பின்னர் நாம் தீர்மானம் எடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்காதுள்ளது. இந்நிலையில் பிரதான ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி தமிழர் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையடுத்து நேற்று முன்தினம் மாலை அவரை சந்தித்து பேச்சியிருந்தனர்.
சம்பந்தன், சுமந்திரன் இருவருடன் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் இந்த சந்திப்பை நடத்தியிருந்தார். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகள் இம்முறை எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகளின் ஆதரவை தாம் எப்போதும் எதிர்பார்த்து செயற்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துக்கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளுடன் எப்போதும் சகல விதமான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்க தாம் தயராக உள்ளதாகவும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றினை நாம் முன்னெடுக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கூறியுள்ளதுடன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இதற்கு பதில் தெரிவித்த சம்பந்தன், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஆரம்பத்தில் நீங்கள் கூறிய விடயங்களை உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வையுங்கள். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள காரணிகளை அடிப்படையாக கொண்டு நாம் எமது தீர்மானங்களை முன்னெடுக்கின்றோம். இப்போது எமது நிலைப்பாடுகளை உடனடியாக கூற வேண்டிய தேவை ஏற்படவில்லை.
அதுமட்டும் அல்ல, தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பிரதான தமிழ் கட்சிகளும் இணைந்து ஒரு நிலைப்பாட்டினை எட்டியுள்ளன. எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் கோரிக்கைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நிலைப்பாடுகளை ஆராய்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை ஆராய்ந்தும் நாம் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்க முடியும் என பிரதமரிடத்தில் எடுத்துக்கூறியுள்ளார்.