ஊடக படுகொலைகள், அச்சுறுத்தல்கள், நீதிமறுப்புக்களை கண்டித்து அடையாள போராட்டம்..!
மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்துள்ளன.
அதிலும் 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது கொலை கலாச்சாரம் இன்று வரை தொடர்கின்றது.
தான் நேசித்த மக்களிற்காகவும்,ஊடக சுதந்திரத்திற்குமாக தனது இன்னுயிரை ஈந்த சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளை நோக்கி நீதி கிட்டாத நிலையில் காலம் கடந்து செல்கின்றது.
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாளாக மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
நிமலராஜனுடன் அரங்கேற்றப்பட்ட ஊடகப்படுகொலைகள் 43 இற்கும் அதிகமான நண்பர்களை இழக்க வைத்;து அநாதரவாக எம்மை விட்டிருக்கின்றது.அதிலும் 2005 முதல் 2010 வரையான ஆட்சிக்காலத்தில் கொலைகள்,
காணாமல் போதல்கள் உச்சமடைந்திருந்தது.நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் ஊடக தொழிலிருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ வெளியேற வேண்டி ஏற்பட்டிருந்தது.
ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.ஊடகவியலாளர்கள் இன வேறுபாடின்றி உண்மைகளை நேசித்தமைக்காக தாக்கப்பட்டனர்.அச்சுறுத்தப்பட்டிருந்தனர். மாறி மாறி ஆட்சியிலிருந்த எத்தரப்பும் ஊடகவியலாளர்களை கொன்றவர்களை,
ஊடகவியலாளர்களை காணாமல் ஆக்கியவர்களை குற்றவாளி கூண்டிலேற்ற தயாராக இருக்கவில்லை. ஓப்புக்கு பெரும்பான்மையின கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடக நண்பர்கள் இருவர்கள்
தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்ட போதும் அது கூட இழுபறிப்பட்டே செல்கின்றது. அதிலும் நல்லாட்சி என ஆட்சிக்கதிரையேறியவர் தனக்கு 800 கோடி வீட்டுடன் செல்கின்றார். அவரை ஆட்சிக்கதிரையேற்ற
பாடுபட்ட ஊடகங்களை கூட அநாதரவா கைவிட்டே செல்கின்றார்.இன்னொறுபுறம் விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் போதாதிருப்பதாக சப்பைக்கட்டு கொட்டப்படுகின்றது. தனது ஆட்சிக்காலத்திலும்
குற்றவாளிகளை பாதுகாத்து வைத்திருந்ததன் மூலம் எமது நம்பிக்கையினை அவர்களும் சிதைத்துள்ளனர். நல்லாட்சி காலத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல்கள்
இல்லாது போயிருந்த போதும் ஊடக அடக்குமுறைகளும் நெருக்குவாரங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இவ்வாண்டினில் கூட முல்லைதீவில் ஊடகவியலாளர் குமணன் காவல்துறையால் தாக்கபட்டிருந்தார்.
மற்றுமொரு ஊடகவியலாளரான ஜ.தவசீலன் (ஜபிசி) கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.அதே போன்று வீரகேசரி பத்திரிகை அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் தற்போது
விசாரணைக்கு கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். மீண்டும் தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமது கறைபடிந்த கைகளை மறைத்தவாறு பல கொலையாளிகளும் முன்னேவரத்தொடங்கியுள்ளனர்.
நடந்தவை பற்றி அவர்களில் பலரும் ஞாபகமறதி கொண்டுள்ளனர். இந்நிலையில் நண்பன் நிமல் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலத்தை ஊடகப்படுகொலைகள்,
காணாமல் ஆக்குதல்கள்,அச்சுறுத்தல்களிற்கான நீதி கோரி பயணிக்கும் காலமாக வடக்கு ஊடக அமைப்புக்களாகிய நாம் பிரகடனப்படுத்துகின்றோம். ஆட்சியாளர்களிடமும் ,சர்வதேசத்திடமும் நீதி கோரும்
எமது பாதையினை மக்கள் மயப்படுத்த நாம் நேசிக்கும் மக்களிடமே செல்வோம்.