தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 தமிழ் கட்சிகள் கைச்சாத்து - முன்னணி மறுப்பு! VIDEO
ஜனாதிபதி தேர்தலில் பொது நிலைப்பாட்டை எடுப்பதற்காக, தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி, ஆகிய 5 கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பை அடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் தலைமையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,
ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்.
ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பேச்சுக்களின் முடிவில் பொது இணக்க ஆவணத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். எனினும்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துள்ளது.
இது தான் அது...
இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்ட பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கை....
#வெளிப்படையாக