மகாவலி அதிகாரசபையின் எவலுக்கு ஆடும் முல்லைத்தீவு அரசாங்க அதிபா்..! சலப்பையாறு மக்கள் நிா்க்கதி..
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சலப்பையாறு, விவசாய நிலங்களை துப்பரவுசெய்யும்பணியில், அக் காணிகளுக்குச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில்,
அந்த துப்பரவுப் பணிகளை இடை நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலர் ரூபவதி கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்,
உரிய அரச திணைக்களங்களின் அனுமதியுடன் இந்த துப்பரவுப் பணிகள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அப்பகுதிக் காணிகள் தமக்குரியது என மாவட்டசெயலருக்கு
கடிதம் மூலம் உரிமை கோரியதையடுத்து, தமிழ் மக்களின் துப்பரவுப்பணியை நிறுத்துமாறு மாவட்டசெயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
இத்துப்பரவுப் பணிக்கு உரிய திணைக்களங்களின் அனுமதிபெறப்பட்டுள்ளதுடன், இதற்கென மக்கள் பிரதிநிதிகளால் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்ட நிலையில், இவ்வாறு துப்பரவுப் பணிகளை இடைநிறுத்துவது
மிகவும் மோசமான செயற்பாடு எனத் தெரிவித்த அவர், இதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய்ப் பகுதியிலுள்ள மக்களின் விவசாய நிலங்கள், பலவாறாக அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்வேளையில், காடுகளாக இருக்கும் தமது ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில்,
குறைந்தது சிறிய பற்றைகளை அகற்றியாவது தாம் பயிற்செய்கை மேற்கொள்வதற்கு உதவுமாறு பலரிடமும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, மக்கள் பிரதிநிதிகள் சிலரால் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், கொக்குத்தொடுவாய் மக்களின் துப்பரவு செய்யவேண்டிய
ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய காணிகளில், 417ஏக்கர் நிலத்தினை துப்பரவுசெய்ய முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட 417ஏக்கர் நிலத்தினைத் துப்பரவுசெய்வதற்கான
அனுமதிகள் உரிய தரப்பினராலும் வழங்கப்பட்டும் இருந்தது. அதன்படி கடந்த வாரம் முழுவதும், அந்த துப்பரவுப் பணியை ஆரம்பித்து இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், தற்போது உடனடியாக் அதை நிறுத்தும்படி
முல்லைத்தீவு மாவட்டசெயலரால் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து, மாவட்ட செயலரால் அனுப்பி வைக்கப்பட்ட
கடிதத்தினையும் காட்டியதுடன், விடயத்தினையும் தெரியப்படுத்தினர். தாம் துப்பரவுப்பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பணிகளை நிறுத்தும்படி மாவட்ட செயலரால் தமக்கு அறிவித்தல்
தரப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவ்வாறு துப்பரவுப் பணிகளை நிறுத்துவதற்குரிய காரணம்என்னவெனில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, மாவட்ட செயலருக்கு கடிதம் அனுப்பி,
இக் காணிகள் தங்களுடைய பகுதி என்ற வகையிலே அதை நிறுத்தும்படி அறிவித்ததற்கமையவே, இத்துப்பரவுப் பணிகளை நிறுத்தவேண்டும் என்ற அறிவித்தலை மாவட்ட செயலர் உரிய பகுதிக்குரிய
பொது அமைப்புளுக்கு வழங்கியுள்ளார். இப்படியே காணிகள் முழுவதையும் அபகரித்துக்கொண்டிருந்தால், இந்த மக்களினுடைய நிலைமைகள் என்ன என கேட்க விரும்புகின்றேன்.
மேலும் துப்பரவுப்பணிகளைச் செய்யுமாறு உரிய தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாது, 417ஏக்கர் நிலத்தினை துப்பரவுசெய்வதற்குரிய நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலே மக்கள், மிகுந்த சிரமத்தின் மத்தியில், தங்களுடைய வாழ்வாதாரத்தினை ஒரே நோக்கமாகக்கொண்டு, அந்தக் காணிகளைத் துப்பரவு செய்ய முயன்றபோது அது தடுக்கப்படுவதும்,
உடனடியாக துப்பரவுப்பணிகளை நிறுத்த வேண்டும் என்ற அறிவித்தலினையும் சொல்லியிருப்பதையுமிட்டு மிகுந்த வேதைனையுடன் அம் மக்கள் காணப்படுகின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் காணி விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று, மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றபோது, பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளுநரும் அக்கூட்டதில் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தின் பின்னர் அந்த உரிய இடங்களை அளுனர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டு, இந்த மக்களுக்கு குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்படவேண்டும்என்பதை தெரிவித்துமிருக்கின்றனர்.
ஆளுநரும் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியிருந்ததாக கமக்கார அமைப்பினர் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர். அதற்குப் பிற்பாடு இப்படியான நடவடிக்கை இடம்பெறுகின்றதெனில், இந்த மக்கள் எவ்வாறு
தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வது, என்ன தொழிலைச் செய்வது. இப்படியாக மிகவும் மோசமான நிலைமைக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக இருப்பதை நான் மிகவும் கண்டிக்கின்றேன்.
அந்த வகையில் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பினர் இவ்விடயத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டதற்கிணங்க, ஆளுநர் மற்றும் கடந்த காணி விடயம் தொடர்பான கூட்டத்தின்போது கலந்துகொண்ட
பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து இவ்விடயத்தினைத் தெரியப்படுத்தும்படி கூறியிருக்கின்றேன். அத்துடன் உரிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுவிடயத்தினைத் தெரியப்படுத்தியிருந்தேன்.
இதற்குரிய சரியான தீர்வுகள் கிடைக்காவிடில் அந்த மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் தயாராகஉள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். என்றார்.