SuperTopAds

வடமாகாணத்திற்கு சொந்தமான 6 பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் உத்தியோகபூா்வமாக இணைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கு சொந்தமான 6 பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் உத்தியோகபூா்வமாக இணைக்கப்பட்டது..!

வட மாகாணம் மன்னார் வலயத்திற்குட்பட்ட தற்போது புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டாரவிடம் கையளித்தார். 

இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. மன்னார் வலயத்தை சேர்ந்த மன் /புத் /றிஸ்வான் GMMS ,மன் /புத் /ஆப்தீன் GMMS, மன் /புத் / அன்சரி GMMS , மன் /புத் / ஹஸ்பன் GMMS,மன்/ புத் / அயூப் GMMS, 

மன் /புத் /ரிஷாத் பதியுதீன் மகாவித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளும் தற்போது புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்பாடசாலைகளில் மொத்தமாக 2386 மாணவர்களும் 167 ஆசிரியர்களும் 

தற்போது கடமைபுரிந்துவருகின்றனர். 1990 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து இப்பாடசாலைகள் புத்தளத்தில் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்து. அத்துடன் இப்பாடசாலைகளின் அபிவிருத்தி 

மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் என்பன வடமாகாணத்தின் நிதியிலிருந்தே இதுவரை ஒதுக்கப்பட்டன . இனிவரும் காலங்களில் இவற்றை வடமேல்மாகாணத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு 

இந்த கலந்துரையாடல் இரண்டு மாகாணங்களினது ஆளுநர்கள் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலை தொடர்ந்து வடமாகாணத்தை சேர்ந்த குறித்த ஆறு பாடசாலைகளையும் ஆளுநர் வடமேல்மாகாண ஆளுநரிடம் கையளித்தார். 

இதன்போது வடமேல் மாகாண ஆளுநர் தனது அதிகாரிகளுக்கு குறித்த பாடசாலைகளை வடமேல் மாகாணத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். 

இந்த கலந்துரையாடலின் போது வடக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், வடமாகாண மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் , கல்வி அமைச்சின் செயலாளர்கள், 

திட்டமிடல் பிரதிப்பிரதம செயலாளர் , நிதி பிரதிப்பிரதம செயலாளர்கள், வடமாகாண கல்வி பணிப்பாளர் , மன்னார் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.