7 ஆயிரம் இளைஞா், யுவதிகளுக்கான நியமனத்தை அதிரடியாக நிறுத்தியது தோ்தல் ஆணைக்குழு..!
பயிலுநா் செயல்திட்ட உதவியாளராக நாடுபூராகவும் 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நியமனத்தினை ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் இடைநிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப் பிரிய 25 மாவட்டச் செயலாளர்களிற்கும் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில் குறித்த பணிப்புரையை மீளப் பெற்று தமக்கான நியமனத்தை உறுதி செய்யுமாறு பயிலுநர்களாக தேர்வானவர்கள் மாவட்டச் செயலகம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடுபாராகவும் உள்ள கிராம சேவகர்களிற்கு உதவியாளர்களாகப் பணியாற்றும் வகையில் க.பொ.த உயர்தரத்துடன் பயிலுநர்களாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதற்காக கடந்த யூன் மாதம் முதல் கொழும்பில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் கடந்த 16ஆம் திகதி மேற்படி நியமனம் 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு பணிக்கமர்த்தப்படும் ஊழியர்களில் வடக்கு மாகாணத்திற்கும் 1440 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட 1440 பேரில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 999 பேர் நியமன் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு 105 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 144 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதோடு மன்னார் மாவட்டத்திற்கு 100 பேரும் வவுனியா மாவட்டத்திற்கு 92 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்..
இவ்வாறு நியமிக்கப்பட்ட பயிற்சிக் காலத்திற்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் அக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படும் எனவும் வழங்கப்பட்ட நியமனத்தில் குறிக்கப்பட்டுள்ள வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் புதிதாக நியமனம் கிடைத்தவர்கள்
மிகவும் ஆவலாக நேற்றைய தினம் மாவட்டச் செயலகங்களில் தமக்கான கடமைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்தவர்கள் தமக்கான பிரதேச செயலகம் வழங்கப்படும் என எண்ணியிருந்தவேளையில் மாலையில் தங்களிற்கான பணிகளை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பே வழங்குமாறு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பணிப்புரை அனுப்பி வைத்துள்ளதனால் தேர்தலின் பின்பே வழங்கப்படும் எனத் தெரிவித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருப்பினும் குறித்த நியமனத்தின் வகை , இதற்காக நேர்முகப் பரீட்சை இடம்பெற்ற காலம் , பெறப்பட்ட அனுமதிகள் என்பன தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது.
அவற்றின் அடிப்படையில் குறித்த நியமனத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும் என யாழ். மாவட்டத்தில் தேர்வானோர் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.