SuperTopAds

மக்கள் காணிகளை கேட்பதுபோல் இராணுவமும் காணிகளை கேட்கிறதாம்..! குதா்க்கமாக பேசும் ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
மக்கள் காணிகளை கேட்பதுபோல் இராணுவமும் காணிகளை கேட்கிறதாம்..! குதா்க்கமாக பேசும் ஆளுநா்..

தமிழ் மக்கள் தமது சொந்த காணிகளை தாருங்கள் என கேட்பதுபோல் இராணுவத்தினரும் பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை கேட்கிறாா்கள். என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் குதா்க்கமாக பேசியிருக்கின்றாா்.

மக்கள் இராணுவம் ஆகிய இரு தரப்புக்களும் அப்பால் மூன்றாம் தரப்பாக நாம் முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுரைத்துள்ளார். யாழ்ப்பணத்தில் பாதுகாப்பு படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு 

தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என அரசின் கருத்தாக உள்ளது. போர் முடிந்தும் அவர்கள் அதில் இருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் அதற்கும் அப்பால் தேசிய பாதுகாப்பு விடயம் என்ற ஒன்றும் நாட்டுக்கு உள்ளது.

எனவே மக்கள் நலன் தேசிய பாதுகாப்பு இரண்டையும் பார்க்க வேண்டும். இவ்வாறான இரண்டு வாதங்கள் உள்ளன. எனவே அதில் நாம் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். யாழில் கடந்த காலத்தில் ஏராளமான காணிகள் பாதுகாப்பு படைகள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தன. 

ஆனால் இப்போது அவற்றில் பெரும்பாலானவை விடுவிக்கப்பட்டு வெறுமனே 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளே பாதுகாப்பு தரப்பிடம் உள்ளன. அதில் ஆயிரம் ஏக்கர் காணி பலாலி விமான நிலையத்திற்கு சொந்தமாகப் போகின்றது. 

எனவே மிகுதி காணிகள் தொடர்பிலேயே நாம் அவதானம் செலுத்த வேண்டியிருக்கின்றது. குறிப்பாக வலி.வடக்கு பகுதிகளில் தெல்லிப்பழை, மயிலிட்டி ஆகிய பிரதேச காணிகளை பற்றியே நாம் கூடிய கவனம் செலுத்தி ஆராய்ந்தோம். 

அதில் தெல்லிப்பழையில் 727 ஏக்கர் காணியும் மயிலிட்டியில் 200 ஏக்கர் காணியும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவ்வாறு ஆக்கிரமிப்பில் உள்ள 927 ஏக்கர் காணிகளினால் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. 

அவர்களின் பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டும். மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை மீள வாழ கேட்கின்றனர். அதே நேரம் இராணுவமும் தமக்கு தேசிய பாதுகாப்பு கருதி சில இடங்களை கேட்கின்றது.

எனவே இந்த இரு தரப்புகளின் கோரிக்கைக்கு அமைய மூன்றாம் கருத்து கேட்க வேண்டும். அதன் ஊடாக இந்த பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்றே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் முக்கியமாக இராணுவம் வசம் உள்ள 727 ஏக்கர் காணியும் முழுமையாக தேவைதானா என மீளாய்வு செய்யுமாறு பாதுகாப்பு தரப்பை கோரியுள்ளேன். அதில் அரைவாசி காணிகளையாவது விடுவிக்க வேண்டும் 

என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இராணுவமும் ஆராய்வதாக கூறியுள்ளது. அவ்வாறு அவர்கள் காணிகளை விடுவித்தால் இராணுவத்திற்கு மாற்றுக் காணிகள் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

பாதுகாப்பு தரப்பினர் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் தமக்கான இடங்களை கோருகின்றனர். அதனை நாம் பரிசீலிக்க வேண்டிய தேவையும் உள்ளது. இராணுவம் தங்களுக்கு எந்த காணிகள் தேவை என்று அவர்களே தீர்மானிப்பார்கள். 

ஏனெனில் பாதுகாப்பு கேந்திரமான அமைவிடங்கள் அவர்களுக்கு தேவையாக உள்ளன என்றார்.