முல்லைத்தீவு மாவட்டத்தில் 28782 ஏக்கா் நிலம் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களின் பிடியில்..!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 28782 ஏக்கா் நிலம் படையினா் மற்றும் திணைக்களங்களின் பிடியில் உள்ளதாக மாவட்ட செயலா் எழுத்துமூலமாக அறிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் படையினர் மற்றும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நிலங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற
விசேட கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திலேயே மாவட்ட செயலாளர் மேற்படி தகவல்களை தெரிவித்துள்ளார்.
இவற்றின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிலங்களில் இராணுவத்திடம் ஆயிரத்து 694.5 ஏக்கர் நிலமும்
சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் 51.5 ஏக்கர் நிலமும் உள்ளதோடு தனியார் நிலங்களில் இராணுவத்தினரிடம் 114.75 ஏக்கர் நிலம் கடற்படையினரிடம் 48 ஏக்கர் நிலமும்
உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே 2 ஆயிரத்து 278 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் திணைக்களங்களின் பிடியில் வனவள திணைக்களத்தின் பிடியில் 1510 குடும்பங்களின் 3 ஆயிரத்து 582.5 ஏக்கர் நிலம் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளதோடு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிடியில் 371 குடும்பங்களின் ஆயிரத்து 453 ஏக்கர் நிலம் உள்ளதாகவும்
மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிடியில் 21 ஆயிரத்து 256 ஏக்கர் நிலம் உள்ளதோடு
தொல்லியல் திணைக்களத்தின் வசம் 28 குடும்பங்களின் 212 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இவற்றின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 1909 குடும்பங்களுக்குச் சொந்தமான 26 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் திணைக்களங்களின்
பிடியில் உள்ளது என மாவட்ட செயலாளர் எழுத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.