அரசியல்வாதிகளை வழிமறித்து அச்சுறுத்தும் மணல் கொள்ளையா்கள்..! அதிகாாிகள் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்..?
மணல் கொள்ளையா்களால் பிரதேசசபை உறுப்பினா்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்களை கட்டு ப்படுத்த பிரதேசசபை நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுக்கடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 28ஆந் திகதியன்று, மணற் கொள்ளையரால், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சத்தியசீலன் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 12.09.2019 நேற்றையநாள் இடம்பெற்ற,
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் இவ்வாண்டிற்கான செப்ரம் மாத அமர்வில் இது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே சபை உறுப்பினர் முகுந்தகஜன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் காலங்காலமாக நிறைய பிரேரணைகளை நிறைவேற்றியிருக்கின்றோம். சட்டவிரோதமாக அகழப்படும் மணல், கிரவல், கல் சம்பந்தமாக நிறைவேற்றியிருக்கின்றோம். அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலிலும் இது தொடர்பில்
தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். இருந்தும் அவற்றுக்கான நடவடிக்கை இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை.இந் நிலையில் கடந்த 28.08.2019அன்று இரவு சபை உறுப்பினர் சத்தியசீலன், அவரின் குடும்பசகிதம் அவரது இல்லத்தினை
நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளை மணற் கொள்ளையரால் வழிமறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.குறித்த மணற் கொள்ளையர் மணவாளன்பட்டமுறிப்பிலே, மிகவும் சட்ட விரோதமான முறையிலே மணல் அகழ்வில் ஈடுபட்டிருக்கின்றார்.
அவரின் அந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு அரச திணைக்களங்களும், போலீஸாரும் துணைபோகின்ற விதத்தில் அங்கு மணல் அகழ்வு இடம்பெறுகின்றன.அந்த அகழ்வுகள் சம்பந்தமாக நாம் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
சுட்டிக்காட்டியிருந்ததுடன், சபையில்பிரேரணையாக நிறைவேற்றியிருந்தோம்.அந்த குறித்த நபர் எமது சபை உறுப்பினர் மீது உயிர் அச்சுறுத்தல் விடுகின்றவகையில், வாகனத்தினை இடைமறித்து அவர்மீது அச்சுறுத்தலை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் போலீஸார் வந்தே சபை உறுப்பினரை மீட்டெடுத்துச் சென்றுள்ளனர்.இந்த அச்சுறுத்தல் நடவடிக்கை எமது சபையையும், எங்களையும், எங்களது நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாக்கியிருக்கின்ற ஒரு நடவடிக்கையாகும்.
எந்தவொரு அனுமதியுமில்லாமல், எமது வளங்களை அள்ளிக்கொண்டுபோகின்ற மணல் மாபியாக்கள் அவ்வாறன நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.இப்படியே இருந்தால், இன்று சபைஉறுப்பினரான அவருக்கு இவ்வாறான அச்சுறுத்தல் இடம்பெற்றதைப்போன்று,
நாளை தவிசாளருக்கும் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து எங்கள் பிரதேசத்தினுள் சட்டவிரோத தொழிலில் ஈடுடும் ஒருவருக்கு இவ்வாறான துணிச்சல் இருந்தால்,
மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற எமது உயிர்களுக்கும், எங்களின் இவ்வாறான கருத்துச் சுதந்திரத்திற்கும், எங்களின் நடவடிக்கைகளுக்கும் இந்த சபை என்ன பொறுப்புக் கூறப்போகின்றது.நாங்கள் பேசுகின்ற விடயங்கள் அனைத்தும்,
எங்களுடைய இடத்தில் இருக்கின்ற வளங்கள், மற்றும் எங்கள் இடங்களில் இருக்கும் மக்களின் நலன்களைக் கருதியே நாம் பேசுகின்றோம்.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டாது.
ஏன் எனில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அனைத்தும் சட்டத்திற்கு எதிரான திணைக்களங்களாகவே செயற்பட்டு வருகின்றன.இது சம்பந்தமாக ஆக்கபூர்வமான நடவடிக்கையினை சபை மேற்கொள்ளவேண்டும்.
இது தொடர்பில் வடபிராந்திய போலீஸ்மா அதிபருக்கும், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் போலீஸ் அத்தியட்சகருக்கும் அறிவிக்கவேண்டும்.எமது சபை சார்பாக இதற்கு ஓர் ஆய்வுக்குழுவினை நியமிக்கவேண்டுமென தவிசாளரைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அந்த ஆய்வுக்குழுவில் கனியவளங்கள், வனவளத் திணைக்களம் என அனைத்துத் திணைக்களங்களுடனும் இணைந்து, இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்யவேண்டும்.அப்போது அங்கு இடம்பெறும் மணற்கொள்ளைகளையும்,
மணல் மாபியாக்களின் செயற்பாடுகளையும் நாம் நன்கு அறியக்கூடியதாக இருக்கும்.மேலும் எமது சபை உறுப்பினர்மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதென்பது வேதனைக்குரிய விடயம். இதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.